அண்மையில் சீவக சிந்தாமணி என்ற புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்த்து. இது ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. சீவகப் பெருவழுதியின் வாழ்வைச் சித்தரிக்கும் நூல் இது. சமணக் காவியமான இந்த நூல் திருத்தக்க தேவரால் எழுதப்பட்ட்து. பதின்மூன்று இலம்பகங்களையும் (அத்தியாயம்) 3145 பாடல்களையும் கொண்டுள்ளது. இதன் காலம் கி.பி.2ம் நூற்றாண்டு முதல் 9ம் நூற்றாண்டு வரைப் பலவாறாக கூறப்படுகிறது. கம்பரது இராமாயணம், சேக்கிழாரது பெரிய புராணம் ஆகியவை இந்நூலின் நடையைப் பின்பற்றுகின்றன என அறிஞர்கள் கூறுவர்.
சமண நூலாக இருந்தாலும் வருணனைகளில் இந்து மதக் கடவுள்களைப் பற்றிய குறிப்புகள் பல இடங்களில் காணப்படுகின்றன.சில இந்துத் தத்துவங்களும் கூறப்படுகின்றன. இராமன், முருகன், பிரமன், திருமால், சிவபிரான், இலக்குமி மற்றும் வேறு சில தேவர்களும் சொல்லப்படுகிறார்கள். திருத்தக்கதேவர் இந்துக் கடவுளர்களை அறிந்திருந்தார் என்று கொள்ளவேண்டும். வழிபட்டார் என்று கருத இடமில்லை. அசோக மரத்தின் ( பிண்டி ) நிழலில் வீற்றிருக்கும் அருகப் பெருமான் அவர் வணங்கிய தெய்வம்.
இந்துக் கடவுளர்களைப் பற்றிய குறிப்புக்கள் சிலவற்றைப் பார்க்கலாம். அடைப்பில் இலம்பக எண், பாட்டின் எண் கொடுக்கப்பட்டுள்ளன.
திருமால்
உலகு அளப்பான் ஆதி சங்கமொடு ஏந்தி தேங்கொள் மார்பிடைத் திளைக்கும் செம்பொன் ஆரம் (7-3)
மலையில் தேன் கூடுகள் உடைந்து தேன் ஆறாய்ப் பெருகிறது. அதன் வழியில் அகப்பட்ட சந்தன மரங்கள் ஆடுகின்றன. அக்காட்சி சங்கு சக்கரம் ஏந்திய, உலகளந்த திருமாலின் மணியாரம் புரள்வதைப் போல் இருக்கிறது.
பிரமன்
பெரும் பெயர்ப் பிரமன் என்னும் பீடினால் பெரிய நீரான் ( 1- 178 )
பெரும் புகழ் பெற்ற, தவம் செய்து சிறந்த, பெருமை உடைய பிரமன்.
இராமன்
மராமரம் ஏழும் எய்த வாங்குவில் தடக்கை வல்வில் இராமனை வல்லன் என்பது இசையலால் கண்டதில்லை ( 7- 87) சீவகனின் வில் திறமையைக் கண்ட விசயன் அவனைப் புகழ்கிறான். கிஷ்கிந்தையில் மராமரங்கள் எழினையும் ஒரே அம்பால் வீழ்த்திய இராமனின் திறமையை கேள்விப்பட்டிருக்கிறோம். இன்று உன் மூலம் அதனைக் கண்டோம்
சிவபெருமான்
- பொலம் கொள் கொன்றையினான் சடை போல் மின்னி ( 1 – 3 ) மலை முகட்டிலுள்ள கார் மேகங்கள் மின்னி இடீடித்து மழையைப் பொழிகின்றன. இது கொன்றைமாலை அணிந்த சிவபிரானின் வார்சடை போல் உள்ளது.
- முக்கண் சினம் திகழ் விடையினானும் செல்வியும் சேர்ந்த்து ஒத்தே ( 1-159 )
சச்சந்த மன்னனும் விசயை என்னும் அவனது அரசியும் கூடியிருப்பது, முக்கண்ணுடைய சிவபெருமானும் உமையம்மையும் ஓருடலாய் இருப்பதைப் போன்றிருக்கிறது.
- குழவி வெண் திங்கள் கோட்டின் மேல் பாயக் குளிர்புனல் விரித்து ஏற்கும்
அழலவிர் சூலத்து அண்ணலே போல அருவி நீர் மருப்பினின் எறியக் ( 10 – 4 )
திருசூலத்தை ஏந்திய சிவனின் விரிசடையில் உள்ள கங்கை நீரைச் சொரிகிறாள். அந்நீர் தந்தம் போல் வளைந்த பிறைமதியின் மேல் விழுகிறது. அதேபோல் குறிஞ்சி நிலத்தில் அருவிகள் அங்கே உள்ள யானைகளின் தந்தங்களில் விழுகிறது.
- முடிச்சடை முனிவன் அன்று வேள்வியில் கொண்ட வேல்கண் மட்த்தகை மகளிர் ( 10 – 184 )
மகளிரது கண்கள் வேலுக்கு ஒப்பிடப்படுகின்றன. தக்கன் வேள்வியை அழிக்க சிவபெருமான் வீரபத்திரராகி பயன்படுத்திய வேலைப் போன்றவை அக்கண்கள்.
முருகன்
- குலம் நினையல் நம்பி கொழுங்கயற்கண் வள்ளி நலன் நுகர்ந்தான் அன்றே நறுந்தார் முருகன் ( 2 – 74 )
ஆயர் குலப்பெண்ணான கோவிந்தையை கமன்னர் குலத்து சீவகன் மணக்க இருக்கிறான். குல வேற்றுமையைப்
பாராது சீவகன் மணமுடிக்க வேண்டும் என்பதற்காக வேடற்குலத்தில் பிறந்த வள்ளியை மணந்த முருகனைக்
குறிப்பிடுகிறார்.
- திருவரை மார்பன் திண்தேர் மஞ்ஞயே முருகன் தானென்று ( 3 – 320 )
சீவகன் போர் புரிவதைப் பார்த்த பகைவர்கள் அவனது தேர் மயில் தான் என்றும் அவன் முருகப் பெருமான் தான்
என்றும் எண்ணி ஓடிவிடுகின்றனர்.
- வள்ளல் மாத்தடிந்தான் அன்ன மாண்பினான் ( 4 – 179 )
மாமரமாய் நின்ற சூரனைப் பிளந்த வள்ளலாகிய முருகனைப் போன்றவன் சீவகன்.
- முந்து சூர் தடிந்த முருகன் நம்பி என்பார் ஐந்து உருவ அம்பின் அனங்கன் என்று அயர்வார் ( 12 – 171 )
பெண்கள் சீவகனைப் பார்க்கின்றனர். சிலர் அவனைச் சூரபத்மனை வீழ்த்திய முருகனே என்றும். சிலர் ஐந்து அழகிய
மலர்க்கணைகளைக் கொன்ட மன்மதனே என்றும் சொல்கின்றனர்.
திருமகள்
தாமரை மேல் வீற்றிருக்கும் திருமகளைப் போன்றவர் என்று பெண்கள் வருணிக்கப்படுகிறார்கள்.
1 தலம் கொள் தாமரைத் தாது உறை தேவியும் ( 1 – 313 ) சச்சந்தன் மனைவியாகிய விசயை
2 தெளி கயம் மலர் மேலுறை தேவியின் ஒளியும் ( 4 – 151 ) இலக்குமியைப் போல் ஒளிமிக்க குணமாலை
3 செய்ய தாமரை மேல் திருவே கொலோ ( 3 – 147 ) சீவகனின் மனைவி காந்தர்வதத்தை
4 நன்பொன் பூ வீற்றிருந்த திருமாமகள் ( 1 – 1 ) பூவில் அமரும் அலைமகள்
நா வீற்றிருந்த புலமாமகள் ( 1 – 1 ) நாவில் அமரும் கலைமகள்
சில பாடல்களில் பல கடவுளர்கள் இணைத்துச் சொல்லப்படுகின்றனர்.
ஓடுமுகில் கீறி ஒளிர் திங்கள் சிகை வைத்தே மாடமது வார் சடைய வள்ளலையும் ஒக்கும்
நாடிமுகம் நான்கதனின் நான்முகனை ஒக்கும் நேடி நிமிர் தன்மையினின் நேமியையும் ஒக்கும் ( 3 – 106 )
இதில் அயன், அரி, அரன் ஆகிய மூவர்களும் இடம் பெறுகிறார்கள். மிக உயர்ந்த மண்டபத்தின் உச்சியில் தோன்றும்
நிலவு சிவபெருமானின் சடை மேலுள்ள பிறையைப் போன்றது அங்கே உள்ள நான்கு மாடங்கள் நான்முகனை
நினைவூட்டுகின்றன. உயர்ந்த அம்மண்டபம் ஓங்கி உலகளந்த உத்தமனைப் போல் இருக்கிறது.
தருமன் தண்ணளியால் தனது ஈகையால் வருணன் கூற்று உயிர் மாற்றலின் வாமனே
அருமையால் அழகில் கணை ஐந்துடைத் திருமகன் திரு மானில மன்னனே ( 1 – 131 )
சச்சந்தன் என்னும் அரசன் அருள் புரிவதில் அறக்கடவுள். கொடையில் வருணன். மாற்றார் உயிரைக் கவர்வதில் இயமன். கலைக்கு இடமான அருமைக்கு அருகன். அழகில் மன்மதன்
திருவிற்கும் கற்பகத் தெரியல் மாலையார் உருவிற்கோர் விளக்கமாம் ஒண்பொற் பூங்கொடி
முருகற்கும் அனங்கற்கும் எனக்கும் மொய்சடை ஒருவற்கும் பகைத்தியால் ஒருத்தி வண்ணமே ( 6 – 77 )
கேமசரி என்ற பெண் அழகுக்குத் திருமகளையும் ஈர்ப்புக்கு மன்மதனையும் கண்களுக்கு முருகனின் வேலையும் நெற்றிக்குச் சிவனது பிறைநிலவையும் ஒத்து இருக்கிறாள். அதனால் இவர்களுக்குப் பகையாக இருக்கிறாள்.
இதைப்போன்ற குறிப்புக்கள் இந்த நூலில் மேலும் பல உள்ளன. இடம் கருதி ஓரளவே மேலே தந்துள்ளேன்.