சோழநாட்டிலே, பழையாறை என்னும் ஊரிலே, வைசியர் குலத்திலே, பெருஞ்செல்வமுடையவரும் சிவனடியார்களைத் திருவமுது, செய்வித்து அவரவர் குறிப்பறிந்து கந்தை கீள்கோவணம் என்பவைகளைக் கொடுப்பவருமாகிய அமர்நீதிநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் திருநல்லூர் என்னுஞ் சிவஸ்தலத்திலே மகோற்சவதரிசனஞ் செய்ய வருஞ் சிவனடியார்கள் திருவமுது செய்யும் பொருட்டு ஒரு திருமடம் கட்டுவித்துக்கொண்டு, தம்முடைய சுற்றத்தார்களோடும் அவ்விடத்திற் போய்ச் சேர்ந்து, மகோற்சவ தரிசனஞ்செய்து, தம்முடைய மடத்திலே சிவனடியார்களைத் திருவமுது செய்வித்துகொண்டு, மன மகிழ்ச்சியோடும் இருந்தார்.
இருக்கும் நாட்களிலே, ஒருநாள், சிவபெருமான் பிராமண வருணத்துப் பிரமசாரி வடிவங்கொண்டு, இரண்டு கெளபீனங்களையும் விபூதிப்பையையும் கட்டியிருக்கின்ற ஒரு தண்டைக் கையிலே பிடித்துக்கொண்டு அந்தத் திருமடத்திற்கு எழுந்தருளி வந்தார். அதுகண்ட அமர்நீதிநாயனார் மனமகிழ்ச்சியோடும் முகமலர்ச்சியோடும் அவரை எதிர்கொண்டு வணங்கி, "சுவாமீ! தேவரீர் இங்கே எழுந்தருளிவருவதற்கு அடியேன் பூர்வத்தில் யாது தவஞ்செய்தேனோ" என்று இன்சொற் சொல்ல; பிரமசாரியானவர் அவரை நோக்கி, "நீர் அடியார்களைத் திருவமுது செய்வித்து அவர்களுக்கு வஸ்திரங்களும் கந்தைகளும் கீள் கெளபீனங்களும் கொடுக்கின்றீர் என்பதைக் கேள்வியுற்று, உம்மைக் காணுதற்கு விரும்பி வந்தோம்" என்றார். அதுகேட்ட அமர்நீதிநாயனார் "இந்தத் திருமடத்திலே பிராமணர்கள் போசனம் பண்ணும்பொருட்டுப் பிராமணர்கள் பாகம் பண்ணுவதும் உண்டு. தேவரீரும் இங்கே திருவமுது செய்தருளல் வேண்டும்" என்று பிரார்த்தித்தார். பிரமசாரியானவர் அதற்கு உடன்பட்டு, நாம் காவேரியிலே ஸ்நானம் பண்ணிக்கொண்டு வருவோம். 'ஒருபோது மழைவரினும் தரித்துக்கொள்ளும் பொருட்டு நீர் இந்த உலர்ந்த கெளபீனத்தை வைத்திருந்து தாரும்" என்று சொல்லி, தண்டிலே கட்டப்பட்டிருக்கின்ற இரண்டு கெளபீனங்களில் ஒன்றை அவிழ்த்து, "இந்தக் கெளபீனத்தின் மகிமையை உமக்கு நான் சொல்லவேண்டுவதில்லை. நான் ஸ்நானம்பண்ணிக் கொண்டு வரும்வரைக்கும் நீர் இதை வைத்திருந்து தாரும்" என்று அவர்கையிலே கொடுத்து விட்டு, காவேரியிலே ஸ்நானம்பண்ணுதற்குப் போக; அமர்நீதிநாயனார் அந்தக் கெளபீனத்தை ஒரு தகுந்த இடத்திலே சேமித்து வைத்தார்.
ஸ்நானம்பண்ணப் போன பிரமசாரியானவர் அமர்நீதிநாயனார் சேமித்து வைத்த கெளபீனத்தை அது வைக்கப்பட்ட ஸ்தானத்தினின்றும் நீக்கும்படி செய்து, ஸ்நானஞ்செய்து கொண்டு, மழை பொழிய நனைந்து திருமடத்தை அடைந்தார். அமர்நீதிநாயனார் அது கண்டு எதிர்கொண்டு, "சமையலாயிற்று", என்று சொல்லி வணங்க; பிரமசாரியார், இனி அந்நாயனாருடைய அன்பாகிய ஜலத்திலே முழுக வேண்டி, அவரை நோக்கி, "ஈரம் மாற்றவேண்டும்; தண்டிலே கட்டப்பட்டிருக்கிற கெளபீனமோ ஈரமாயிருக்கின்றது. உம்மிடத்திலே தந்த கெளபீனத்தைக் கொண்டு வாரும்" என்றார். அமர்நீதி நாயனார் சீக்கிரம் உள்ளே போய்ப் பார்த்து. கெளபீனத்தைக் காணாதவராகி, திகைத்து மற்றையிடங்களிலுந் தேடிக் காணாமையால் மிகுந்த துக்கங்கொண்டு, வேறொரு கெளபீனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டு, பிரமசாரியார் முன் சென்று, "சுவாமீ! தேவரீர் தந்த கெளபீனத்தை வைத்த இடத்திலும் பிறவிடங்களிலும் தேடிக் கண்டிலேன். அது போனவிதம் இன்னதென்று அறியேன். வேறொரு நல்ல கெளபீனம் கொண்டு வந்தேன். இது கிழிக்கப்பட்ட கோவணமன்று, நெய்யப்பட்ட கோவணமே. தேவரீர் நனைந்த கெளபீனத்தைக் களைந்து இந்தக் கெளபீனத்தைச் சாத்தி, அடியேன் செய்த குற்றத்தைப் பொறுத்தருளும்" என்று பிராத்தித்தார். அதைக் கேட்ட பிரமசாரியார் மிகக்கோபித்து, "உம்முடைய நிலைமை நன்றாயிருக்கின்றது. நெடுநாட்கழிந்ததுமன்று; இன்றைக்கே தான் உம்மிடத்தில் வைத்த கெளபீனத்தைக் கவர்ந்து கொண்டு, அதற்குப் பிரதியாக வேறொரு கெளபீனத்தை ஏற்றுக் கொள்ளுமென்று நீர் சொலவது என்னை! சிவனடியார்களுக்கு நல்ல கெளபீனம் கொடுப்பேன் என்று நீர் ஊரிலே பரவச்செய்தது என்னுடைய கெளபீனத்தைக் கவர்தற்கோ! நீர் செய்கின்ற இவ்வாணிகம் நன்றாயிருக்கின்றது" என்று சொல்ல; அமர்நீதிநாயனார் பயந்து முகம் வாடி நடுநடுங்கி, "சுவாமீ! அடியேன் இக்குற்றத்தை அறிந்து செய்தேனல்லேன். இதைப் பொறுத்தருளும், தேவரீருக்குச் செய்யவேண்டிய பணிவிடைகளெல்லாம் செய்கின்றேன். இந்தக்கோவணமன்றி வெகுபொன்களையும் பட்டாடைகளையும் இரத்தினங்களையும் தருகிறேன்; ஏற்றுக்கொள்ளும்" என்றார். அதற்குப் பிரமசாரியார் கோபந்தணிந்தவர்போலத்தோன்றி, "பொன்களும் பட்டாடைகளும் இரத்தினங்களும் எனக்கு ஏன்? நான் தரிப்பதற்கு உபயோகியாகிய கெளபீனத்துக்கு ஒத்த நிறையுள்ள கெளபீனம் தந்தாற் போதும்" என்று சொல்ல; அமர்நீதிநாயனார் மனமகிழ்ந்து, "எதனுடைய நிறைக்குச் சமமாகிய கெளபீனத்தைத் தரல் வேண்டும்" என்று கேட்டார். பிரமசாரியார் "நீர் இழந்த கெளபீனத்தின் நிறைக்கு ஒத்த நிறையையுடைய கெளபீனம் இது" என்று சொல்லி, தமது தண்டிலே கட்டப்பட்டிருந்த கெளபீனத்தை அவிழ்த்து, "இதற்கு ஒத்த நிறையுள்ளதாகக் கெளபீனத்தை நிறுத்துத் தாரும்" என்றார். அமர்நீதிநாயனார் "மிகநன்று" என்று சொல்லி, ஒரு தராசைக் கொண்டுவந்து நாட்ட; பிரமசாரியார் அந்தக் கெளபீனத்தை ஒரு தட்டிலே வைத்தார். அமர்நீதிநாயனார் தம்முடைய கையிலிருந்த நெய்யப்பட்ட கெளபீனத்தை மற்றத்தட்டிலே வைத்தார். அது ஒத்தநிறையிலே நில்லாமல் மேலெழுந்தது. அதைக்கண்டு, அடியார்களுக்குக் கொடுக்கும்படி தாம் வைத்திருந்த கோவணங்களெல்லாவற்றையும் கொண்டுவந்து ஒவ்வொன்றாக இட இட; பின்னும் தூக்கிகொண்டு எழும்பியது. அதைப் பார்த்து, ஆச்சரியம் அடைந்து, பலவஸ்திரங்களையும் பட்டுக்களையும் கொண்டுவந்து இட இட; பின்னும் உயர்ந்தது. அது கண்டு அநேக வஸ்திரப்பொதிகளைக் கொண்டுவந்து இட்டார். இட்டும், அத்தட்டு மேலே எழும்ப; கெளபீனத்தட்டுக் கீழே தாழ்ந்தது. அமர்நீதிநாயனார் அதைக் கண்டு மிக அஞ்சி பிரமசாரியாரை வணங்கி, "எண்ணிறந்த வஸ்திரப்பொதிகளையும் நூற்கட்டுகளையும் குவிக்கவும், தட்டு உயர்கின்றது. தமியேனுடைய மற்றத்திரவியங்களையும் இத்தட்டிலே இடுதற்கு அனுமதி தந்தருளும்" என்றார். அதற்குப் பிரமசாரியார் "இனி நாம் வேறென்ன சொல்லுவோம்! மற்றத்திரவியங்களையும் இட்டுப் பாரும். எப்படியும் நம்முடைய கோவணத்துக்கு ஒத்த நிறையில் நிற்கவேண்டும்'. என்றார். அமர்நீதிநாயனார் நவரத்தினங்களையும் பொன் வெள்ளி முதலிய உலோகங்களையும் சுமைசுமையாக எடுத்து வந்து இட இட; தட்டு எழுந்தபடியே மேலே நின்றது. அமர்நீதிநாயனார் அதைக்கண்டு பிரமசாரியாரை வணங்கி, "என்னுடைய" திரவியங்களில் ஒன்றும் சேஷியாமல் இந்தத் தட்டிலே இட்டேன். நானும் என் மனைவியும் புத்திரனும் மாத்திரம் சேஷித்து நிற்கின்றோம். தேவரீருக்குப் பிரீதியாகில் இனி, அடியேங்களும் இத்தட்டில் ஏறுதற்கு அனுமதி தந்தருளும்" என்றார். பிரமசாரியாரும் அதற்கு உடன்பட்டார்.
அது கண்டு, அமர்நீதிநாயனார் மனமகிழ்ந்து, பிரமசாரியாரை வணங்கி, தம்முடைய மனைவியாரோடும் புத்திரரோடும் தராசை வலஞ்செய்து "சிவனடியார்களுக்குச் செய்யுந் திருத்தொண்டிலே அடியேங்கள் தவறாமல் இருந்தோமாகில், அடியேங்கள் ஏறினமாத்திரத்தே இந்தத்தட்டு மற்றத்தட்டுக்கு ஒத்து நிற்கக்கடவது" என்று சொல்லி, திருநல்லூரில் வீற்றிருக்கின்ற பரமசிவனை வணங்கி ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதிக்கொண்டு மகிழ்ச்சியோடு தட்டிலே ஏறினார். ஏறினவுடனே, பரமசிவனுடைய திருவரையிலே சாத்தப்படும் கெளபீனமும் பத்தியிலே சிறிதுங் குறைவில்லாத அமர்நீதிநாயனாருடைய அடிமைத்திறமும் பெருமையில் ஒத்திருந்தபடியால், துலாக் கோலின் இரண்டு தட்டுக்களும் ஒத்து நின்றன. அவ்வற்புதத்தைக் கண்டவர்களெல்லாரும் அமர்நீதிநாயனாரை வணங்கி ஸ்தோத்திரஞ் செய்தார்கள். தேவர்கள் ஆகாயத்தினின்றும் கற்பகவிருக்ஷங்களின் புஷ்பங்களை மழைப்போலப் பொழிந்தார்கள். திருகைலாசபதி தாங்கொண்டு வந்த பிரமசாரி வடிவத்தை ஒழித்து, ஆகாயத்திலே பார்வதிதேவியாரோடு இடபாரூடராய்த் தோன்றி;
தம்மைத் தரிசித்து அந்தத் தராசுத் தட்டிலே தானே நின்றுகொண்டு ஸ்தோத்திரஞ் செய்கின்ற அமர்நீதிநாயனார் அவர் மனைவியார் புத்திரர் என்னு மூவர் மேலும் திருவருணோக்கஞ்செய்து, "நீங்கள் மூவிரும் நம்முடைய அருளைப் பெற்று, நம்முடைய சந்நிதானத்திலே நம்மை வணங்கிக்கொண்டிருங்கள்" என்று அருளிச்செய்து மறைந்தருளினார். அமர்நீதிநாயனாரும், அவர் மனைவியாரும், புத்திரரும், அக்கடவுளுடைய திருவருளினால் அந்தத்தராசுதானே தேவவிமானமாகி மேலே செல்ல, அவரோடு சிவலோகத்தை அடைந்தார்கள்.