தலை, இடை, கடை என மூன்று தமிழ் சங்கங்கள் இருந்தன என்றும் அவைகளில் முதல் இரண்டு சங்கங்கள் கடலுக்குள் போய்விட்டன என்றும் படிக்கிறோம். இந்த சங்கங்கள் பற்றி இறையனார் களவியல் உரை கூறுவது மிகைப் படுத்தப் பட்ட செய்தியாக உள்ளது. கடைசி தமிழ் சங்கத்துக்கு நிறைய ஆதாரம் இருந்தாலும் அதைப் பற்றியும் விடைகாண முடியாத பல புதிர்கள் உள்ளன. பாணிணீயத்துக்கு உரை எழுதிய பதஞ்சலி மஹரிஷியின் அணுகு முறையையும் வேதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மாக்ஸ்முல்லர் பின்பற்றிய முறையையும் பயன்படுத்தி ஒரு விடை காண்பதே இக் கட்டுரையின் நோக்கம்.
தமிழ் மொழியை வளர்க்க, பாண்டிய மன்னர்கள், தமிழ் சங்கங்களை நிறுவிப் புலவர்களை ஆதரித்து வந்தனர். தென் மதுரையில் இருந்த முதல் சங்கம் சுனாமிப் பேரழிவில் கடலுக்குள் போனது. பின்னர் கபாடபுரத்தில் இரண்டாம் தமிழ் சங்கம் இருந்தது. மற்றொரு சுனாமி பேரலை ஏற்படவே அதையும் கடல் விழுங்கியது. பின்னர்தான் மூன்றாம் தமிழ்சங்கம் கூடல் மாநகர் என்றும் ஆலவாய் என்றும் அழைக்கப்படும் மதுரை மாநகரில் அமைக்கப் பட்டது.
மதுரையில் கடைச் சங்கம் இருந்ததற்குப் பல சான்றுகள் இருக்கின்றன. சங்கத் தமிழ் புலவர் பெயர்களில் நாற்பதுக்கும் மேலான பெயர்கள் மதுரை என்ற அடைமொழியுடன் துவங்குகிறது. திருவாசகம், திருக்கோவையாரில் “தண்ணார் தமிழ் அளிக்கும் தண் பாண்டி நாட்டான்” பற்றிய குறிப்புகள் வருகின்றன. அப்பரும் ஆண்டாளும் சங்கத் தமிழ் என்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர். தருமி திருவிளையாடல் கதையையும் தமிழ் சங்கத்தையும் ஒரே பாடலில் அப்பர் குறிப்பிடுகிறார். பிற்காலத்தில் வந்த செப்பேடுகளில், கல்வெட்டுகளில் சங்கம் பற்றிய குறிப்புகள் உள்ளன. திருவிளையாடல் புராணத்தில் நக்கீரர்- சிவ பெருமான் மோதல், சங்கப் புலவர்களிடையே ஏற்பட்ட போட்டி, பூசல், பொறாமை பற்றியும் பல கதைகள் உள்ளன.
நமக்கு இப்பொழுது கிடைத்துள்ள சங்க நூல்கள் 18. அவை பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும் ஆகும். 2000 க்கும் அதிகமான பாடல்கள் அதில் உள்ளன. 470 புலவர்களுக்கு மேல் அவைகளைப் பாடியுள்ளனர்.
தமிழ் கெழுகூடல் (புறம் 58), என்றும் தமிழ் வையை தண்ணம்புனல் (பரி 6-60) என்றும் “தமிழ் நிலை பெற்ற தாங்கரு மரபின் – மகிழ் நனை மறுகின் மதுரை (சிறுபாண்) என்றும் சங்கப் பாடல்களில் படிக்கிறோம்.
கடைச் சங்கம் பற்றி எழும் கேள்விகள் இவைதாம்:
இறையனார் களவியல் உரையில் 49 சங்கப் புலவர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் சங்கப் பாடல்களை 470 க்கும் மேலானோர் பாடியுள்ளனர். இவர்களில் யார் அசல்-ஒரிஜினல் சங்கப் புலவர்கள் என்று தெரியவில்லை. ஊமைப் பையன் ஒருவன் முன்னால் பாடச் செய்து அவன் யார் பாட்டுக்கு உருகுகிறானோ அவர்களே உண்மைப் புலவர்கள் என்ற டெஸ்டில்-சோதனையில் கபிலர், பரணர், நக்கீரர் ஆகியோர் தேறியதாக திருவிளையடல் புராணம் கூறும்.
கி.பி. 470 ஆம் ஆண்டில் வஜ்ரநந்தி என்ற சமண மதத் துறவி தலைமையில் திராவிட சங்கம் என்ற ஒரு சங்கம் இருந்ததாக சமண வட்டாரம் கூறும். அது யார் சங்கம்? தமிழ் சங்கமா? சமணர் தமிழ் சங்கமா? போட்டி, பூசல் பொறாமை இருந்தது உண்மையா? திருவள்ளுவரையும் திணறடித்ததாக தி. வி. புராணம் கூறும் செய்திகள் உண்மையா? இவை எல்லாம் விடை காணப் படவேண்டிய கேள்விகள்.
இவைகளை விட நம்ப முடியாத, பிரமிக்க வைக்கும் செய்திகள் முதல் இரண்டு சங்கங்களைப் பற்றியவை ஆகும். மொத்தம் மூன்று சங்கங்களும் சேர்ந்து 10,040 வருடங்கள் இருந்ததாக களவியல் உரை கூறும். அது மட்டுமல்லாது அந்தக் காலத்தில் இருந்த அரசர் எண்ணிக்கை, புலவர் எண்ணிக்கை முதலியனவும் பெரிய தொகையாக உள்ளன. இவைகளை உறுதிசெய்ய வேறு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை. மொழியியல் ரீதியில் இவை சாத்தியமும் இல்லை.
தலைச் சங்கம் 4440 ஆண்டுகள் இருந்ததாகவும் இடைச் சங்கம் 3750 ஆண்டுகள் இருந்ததாகவும் கடைச் சங்கம் 1850 ஆண்டுகள் இருந்ததாகவும் மொத்தம் மூன்று தமிழ் சங்கங்களும் 10040 ஆண்டுகள் இருந்ததாகவும் இறையனார் களவியல் உரை கூறும். முதல் சங்கத்தில் இருந்த முரிஞசியூர் முடிநாகராயர் பாடல் புறநானூற்றில் உள்ளது. இரண்டாம் தமிழ் சங்க நூலான தொல்காப்பியமும் நமக்குக் கிடைத்துள்ளது. முடிநாகராயர், தொல்காப்பியர் ஆகியோரின் மொழிநடை சங்கப் பாடல்களின் மொழிநடையை ஒத்து உள்ளன. ஆகையால் மொழி இயல் ரீதியில் இவற்றை சங்கப் பாடல் காலத்தில்தான் வைக்க முடியும். மிகவும் பின் போடவோ முன் போடவோ முடியாது.
மாக்ஸ்முல்லர், ரிக் வேதத்தின் காலத்தைக் கணக்கிட குத்து மதிப்பாக ஒரு உத்தியைக் கையாண்டார். ஒரு மொழியின் நடை மாற இரு நூறு ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிட்டு சம்ஹிதை, பிராமண, ஆரண்யக இலக்கியங்களுக்கு தலா 200 ஆண்டுகள் வீதம் ஒதுக்கி, உலகின் பழைய மத நூலான ரிக் வேதத்தை யாரும் கி. மு 1200 க்குக் குறைத்து மதிப்பிட முடியாது என்று கூறினார். பெரும்பாலான அறிஞர்கள் அவர் கூற்றை ஏற்றனர். அதே விதியை தமிழுக்குப் பயன்படுத்தினால் முதல், இரண்டாம், மூன்றாம் சங்கங்களை 200 ஆண்டு கால கட்டத்துக்குள்தான் வைக்க முடியும்.
தொல்காப்பியர் ஒரு அந்தணர் என்றும் அவர் நூல் “நான்மறை முற்றிய” ஒரு ஆச்சார்யர் தலைமையில் நிலந்தரு திரு வில் பாண்டியன் அவையத்துள் நிறைவேறியதாகவும் பழந்தமிழ் நூல்களும் உரை ஆசிரியர்களும் எழுதிச் சென்றுள்ளனர். மாக்ஸ்முல்லரின் மொழி மாற்ற விதியைத் தமிழுக்குப் பயன்படுத்தினால் திருக்குறள், சிலப்பதிகாரம் முதலியன நாலாம் ஐந்தாம் நூற்றண்டில் வந்துவிடும்.
அதிகாரம் என்னும் சொல்
மற்றொரு கேள்விக்குறிய வட மொழிச் சொல் “அதிகாரம்” ஆகும். திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன. சிலப்பதிகாரத்தின் பெயரில் அதிகாரம் உள்ளது. தொல் காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் அதிகாரங்கள் உள்ளன. இவை மூன்றும் ஒரே காலத்தில் எழுந்த நூல்களோ என்ற ஐயப்பாட்டை இந்த சொல் எழுப்பும்.
தொல்காப்பியத்தின் பொருள் அதிகாரம் பிற்சேர்க்கை என்றும் தொல்காப்பியத்தின் காலம் கி.மு அல்லது கி.பி. முதல் நூற்றாண்டு என்றும் பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொள்வர்.
இதில் ஒரு முக்கிய விஷயத்தை நினைவில் கொள்ளவேண்டும். ஒரு நிகழ்ச்சி நடந்த காலம் வேறு. அதை பதிவு செய்த காலம் வேறு. சிலப்பதிகார நிகழ்ச்சிகள் நடந்தது இரண்டாம் நூற்றாண்டு. ஆனால் எழுத்தில் வடித்தது 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டு. தொல்காப்பிய விதிகள் மிகவும் பழம் தமிழ் விதிகள். அவைகளை தொல்காப்பியர் தொகுத்தளித்த காலம் பிற்காலம். அவரே நூற்றுக் கணக்கான இடங்களில் “என்ப: என்று கூறுவதிலிருந்து அவர் தொகுத்தவரே அன்றி முழு நூலையும் எழுதியவர் அல்ல என்பது புலப்படும். அவருக்கு 4 அல்லது 5 நூற்றண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கண வடிவம் பெற்றிருக்கலாம். அகத்தியம் உள்பட வேறு பல இலக்கண நூல்கள் அவருக்கு முன்னரே இருந்தன.
முதல் இரண்டு சங்கங்களின் நூற் பட்டியலைப் பார்த்தால் பல நூல்கள் முழுக்க முழுக்க சம்ஸ்கிருதப் பெயர்களாக உள்ளன (பஞ்ச மரபு, பூத புராணம், மா ப்புராணம், தகடூர் யாத்திரை, பஞ்ச பரதீயம் –இன்னும் பல).
உலகின் முதல் இலக்கண புத்தகத்தை எழுதிய மாமேதை பாணிணியின் அஷ்டாத்யாயிக்கு உரை கண்ட பதஞ்சலி கி.மு இரண்டாம் நூற்றாண்டச் சேர்ந்தவர். பாணிணியை பகவான் பாணிணி என்று தெய்வ நிலைக்கு உயர்த்தியவர். ராமயணத்தில் ராமர் பல ஆயிரம்ஆண்டுகள் வாழ்ந்தார் என்பதை நம்பாத பதஞ்சலி, அந்த ஆண்டுகளை 365 ஆல் வகுத்து ராமர் 28 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார் என்று விஞ்ஞான முறையில் விடை கண்டுள்ளார். இதே உத்தியை முச் சங்கங்களுக்கும் பயன் படுத்தினால் ஓரளவுக்குத் திருப்தியான விடை கிடைக்கிறது.
முதல் மூன்று சங்கங்களுக்கான ஆண்டுகளை 37ஆல் வகுத்தால் 120+100+50= 270 ஆண்டுகள் கிடைக்கும் ஆக மூன்று சங்கங்களும் 270 ஆண்டுகள் இருந்தன என்பதை மொழியியலும் ஏற்கும். முடிநாகராயர் (முதல் சங்கம்), தொல்காப்பியர், பனம்பரனார், காக்கைபடினியார், முடத்திருமாறன் (இரண்டாம் சங்கம்), ஏனைய 470+ புலவர்களின் (மூன்றாம் சங்கம்) மொழி நடை ஆகியன ஏறத்தாழ ஒன்றே. ஆனால் ஒரு கேள்வி எழும். எதற்காக 37 ஆல் வகுக்க வேண்டும்? இந்த எண்கள் சமணர்களின் கண்டு பிடிப்பு என்றும் அவர்களுக்கு 37 எண்ணின் மேல் ஒரு காதல் என்றும் சில ஆய்வாளர்கள் வாதிட்டனர். இது ஒரு திருப்தியான விட இல்லைதான். ஆனால் மொழி நடைக்குப் பொருத்தமாக இருக்கிறது. இதை ஏற்றால் பெரும் எண்ணிக்கை மன்னர்கள், பெரும் எண்ணிக்கை புலவர்களை எப்படி நியாயப் படுத்துவது என்ற கேள்வி எழும். இதற்கும் வலியச் சென்றே விடைகாண வேண்டும். அந்த மன்னர்களின் எண்ணிக்கையில் ஒன்பது என்ற இலக்கத்தை விட்டாலோ அல்லது ஒற்றைப் படை எண் ஆக்கினாலோ ஓரளவுக்கு நம்பத்தகுந்த விடை கிடைக்கும். ஏன் இப்படிச் செய்ய வேண்டும் என்று கேட்டால் இவைகளை எல்லாம் எழுதியவர்கள் பொய் சொல்லும் நோக்கத்தோடு எழுதவில்லை ஏதோ நமக்கு ஒரு புதிர் போட “சங்கேத” மொழியில் (coded language) எழுதி வைத்துள்ளார்கள் என்றுதான் சொல்ல முடியும்.
இதோ கணக்குப் பட்டியல்:
இவ்வளவு விஷயங்களும் சங்கம் என்று ஒன்று இருந்ததை நன்கு உறுதி செய்கிறது. ஒன்றுமே இல்லாமல் அடியார்க்குநல்லாரும் இறையனார் களவியல் உரை கண்டவரும் எழுதியிருக்க மாட்டார்கள். கடல் கொண்ட தமிழ்நாடு, லெமூரியா கண்டம் போன்ற விஷயங்களை “சங்க இலக்கியத்தில் கடல் கோள் (சுனாமி )” என்ற கட்டுரையில் எழுதியுள்ளேன்.
(It was published In August 2006 in Ulaka Thamaizar Peramaippu Souvenir,Salem,Tamilnadu)