அண்மையில் கயிலயம்பதிக்குச்சென்று எம்பெருமானைக் கண்ணாரக் கண்டுக் களித்துத்திரும்பிய இராஜகோபாலன் அவர்கள் தம் கயிலை வழிச் செலவை ( pilgrimage ) நமக்கு எல்லாம் ஒளிக் காட்சியின் மூலம் விளக்கினார். அன்னாருடைய உரைத் திறம் நாம் யாவரும் அறிந்ததே. தாம் பெற்ற இன்பத்தை வையகத்தினராகிய நம்முடன் பகிர்ந்ததற்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கயிலையைப் பற்றித் திருமுறைகளில் அடியேன் படித்தச் செய்திகள் நினைவிற்கு வருகின்றன.
Anjaikulam Temple
திருநாவுக்கரசர் தன்னுடைய முதிர்ந்த வயதில் கயிலைக்குச் செல்ல ஆசைப்பட்டார். தன் உடல் வருந்த மெதுவாகச் சென்று கொண்டிருந்தார். அதைக் காணப் பொறாத இறைவன் ஒரு குளத்தை உருவாக்கி அதில் அப்பர் பெருமானைக் குளிக்கச் செய்து, அவரை அப்படியே திருவையாறுக்கு அனுப்பி விட்டார். அங்கு அப்பருக்குக் கயிலைக் காட்சி கிடைத்தது. முக்கண்ணனையும் மலை வளர் காதலியையும் ஒன்று சேரப் பார்க்கிறார்
" ஐயாறு அடைகின்ற போது காதல் மடப் பிடியொடும் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் "
என்று புளகாங்கிதம் அடைகிறார். கயிலைநாதன் அளித்த இரண்டாம் தொலைக் காட்சி இது.
சிவபெருமான் உமா தேவியை வடவரையில் ( கயிலை ) திருமணம் செய்து கொள்கிறார். அதைக் காண வந்த கூட்டத்தைத் தாங்க முடியாமல் இமயமலைத் தாழ்ந்து விட்டது. சமநிலையைக் கொண்டுவருவதற்கு அகத்தியரை ஹரன் பொதியமலைக்கு அனுப்பி அங்கே அவருக்குத் திருமணக் காட்சியைக் காட்டியருளினார். இது நாம் அறிந்த முதல் தொலைக் காட்சி.
Navalur Temple
ஆனால் தன்னுடைய நண்பராகிய திருநாவலூர் சுந்தரமூர்த்தி நாயனாருக்காக வெள்ளை யானையை அனுப்பி கயிலைக்கு வரவழைக்கிறார். சுந்தரமூர்த்தி செல்வதைப் பார்த்த சேர மன்னன் அஞ்சைக்களத்திலிருந்து ( மகோதை ) குதிரையில் ஏறிக் கைலாயம் செல்கிறார். கையில் ஒரு நூலையும் எடுத்துச் செல்கிறார். இதை அறிந்த ஔவைப் பாட்டியும் கைலை செல்ல ஆசைப்படுகிறார். விநாயகர் பூஜையை ஔவை முடித்தவுடன் பிள்ளையார் தனது துதிக்கையால் அவரை அங்கே அனுப்பி வைக்கிறார்.
பெரு மிழலைக் குறும்பர் என்று ஒரு நாயனார் இருந்தார். அவர் ஒரு சிறந்த யோகி. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பக்தர். அவர் தனது யோக சக்தியினாலேயே கயிலாயத்தை அடைகிறார். குறும்பருக்கு ஒரு கோவில் புதுக்கோட்டை அருகே தேவமலை என்ற இடத்தில் இருக்கிறது.
Pidavur Temple
சேர மன்னன் கொண்டு சென்ற நூலின் பெயர் திருக்கயிலாய ஞான உலா. கயிலையில் சிவன் முன்னிலையில் அவர் அந்நூலைப் படிக்கிறார். அங்கே திருப்பிடவூரைச் சேர்ந்த மாசாத்தன் என்பவரும் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார். படித்து முடிந்த பிறகு சிவன் அந்த நூலை மாசாத்தனிடம் கொடுத்து மண்ணிற்கு எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறார். கைலாயம் சென்று திரும்பி வந்தவர்களில் ஒருவர் திருப்பிடவூர் மாசாத்தன்.
Mizhalai Temple
திரு ராஜகோபாலன் அவர்களோடு இன்னொரு கயிலைப் புனிதரும் ( திரு பிரேம்நாத்) உடன் இருந்தார். நாம் செய்த புண்ணியம் இரு மடங்கு ஆயிற்று. சிவனடியார்களைக் கண்டால் சிவனையே கண்ட மாதிரி அன்றோ.
" அங்கமெல்லாம் குறைந்து அழுகு தொழு நோயராய்
ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும்
கங்கை வார் சடைக் கரந்தார்க்கு அன்பர் ஆகில்
அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே. "