வரலக்ஷ்மி விரதப் பூஜை இந்த வருஷம் ஆகஸ்ட் பன்னிரெண்டாம் தேதி வருகிறது. சுமங்கலிப் பெண்களால் தங்கள் க்ருஹங்களுக்கு சுபிக்ஷம் பெருகும் பொருட்டு இந்த பூஜை கொண்டாடப் படுகிறது.

சிராவண மாதம் ( ஆடி அல்லது ஆவணி மாதம் ) பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையன்று இந்த விரதம் அனுஷ்டிக்கப் படுகிறது. ஒரு மண்டபம் அமைத்து அல்லது ஒரு மேசை வைத்து அங்கு ஒரு தாம்பாளம் அல்லது தட்டு வைக்கவேண்டும். அதில் அரிசியை பரப்பி அதன் மீது வெள்ளி / செப்புச் சொம்பு ( கலசம் ) வைப்பார்கள். கலசத்தை அரிசி அல்லது ஜலத்தால் நிரப்பி மாவிலை கொத்து தேங்காய் வைத்து சந்தனம் அக்ஷதை புஷ்பங்களால் அலங்காரம் செய்து மேலே தேவியின் முகத்தை வைப்பார்கள். நோன்புக் கயிறு , நைவேத்தியங்கள் ( இட்டிலி , நான்கு வித கொழுக்கட்டைகள் , அப்பம் , வடை , வெல்லப் பாயசம் , பழங்கள் ) . தாம்பூலம் ஆகியவைகளை பூஜை இடத்தில் வைத்து பூஜை செய்வார்கள். அப்போது லக்ஷ்மி ஸ்தோத்ரம் , லலிதா சஹஸ்ரநாமம் பாராயணமும் செய்வது உண்டு. பூஜை முடிந்தவுடன் நோன்புக் கயிற்றை வலது கையில் கட்டிக் கொள்வார்கள்.

varalakshmi poojai
Varalakshmi Poojai

மாலையில் உறவினர்கள் நண்பர்களை அழைத்து வெற்றிலை பாக்கு குங்குமம் சந்தனம் பழங்கள் ஏனைய பிரசாதங்களையும் கொடுப்பார்கள்.மறுநாள் ஸ்நானம் செய்த பிறகு கலசத்தை எடுத்து அதில் உள்ள ஜலத்தை வீடு முழுவதும் ப்ரோக்ஷிப்பார்கள். அரிசியை வழக்கம்போல் உபயோகித்துக் கொள்ளலாம் . இந்த விரதத்தின் மகிமையை சிவபெருமான் உமையம்மைக்கு விளக்கியதாகக் கூறப்படுகிறது. சாருமதி என்ற ஸ்திரீ இந்த விரதத்தை சிறப்பாகச் செய்து லக்ஷ்மி கடாக்ஷம் பெற்றாள் என்பது ஒரு கதை. சித்ரநேமி என்ற சிவ கணம் இந்த பூஜையை பக்தியுடன் பார்த்திருந்து தன்னுடைய சாபம் நீங்கப் பெற்றான் என்ற இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது.