சேந்தனார் ஒரு விறகு வெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஒரு சிறிய ஊரில் வாழ்ந்து வந்தார். தீவிர சிவபக்தரான இவர் தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பின்தான் உண்பார்.

ஒருநாள் அதிக மழை பெய்து விறகுகள் ஈரமானதால், அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு இல்லாததால் வீட்டிலிருந்த கேழ்வரகில் களி செய்து சிவனடியார் வரவை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் வராத நிலையில் மனம் நொந்து போனார். அவரது பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பிய நடராஜப் பெரு மான், ஒரு சிவனடியார் வேடத்தில் சேந்தனார் வீட்டுக்கு வந்தார்.

அவரைப் பார்த்து அகமகிழ்ந்த சேந்தனார் கேழ்வரகுக் களியை அவ ருக்கு அளித்தார். அந்த சிவனடியார் களியை விரும்பி உண்டதுடன், எஞ்சி யிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவுக்குத் தருமாறு கேட்டு வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.

மறுநாள் காலையில் வழக்கம்போல் தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோவில் கருவறையைத் திறந்தனர். என்ன ஒரு அதிசயக் காட்சி! நடராஜப் பெருமானைச் சுற்றி களிச் சிதறல்கள்! உடனே இந்த விவரம் மன்னருக்குத் தெரிவிக்கப்பட்டது. நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதை கனவில் தோன்றி ஏற்கெனவே மன்னருக்குத் தெரிவித்திருந்தார்.

சேந்தனார் எங்கிருக்கிறார் என்று கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார் மன்னர். அன்று நடராஜப் பெருமானின் தேர்த் திருவிழா. அதற்கு சேந்தனாரும் சென்றிருந்தார்.

பெருமானைத் தேரில் அமர்த்தியபின் மன்னர் உள்பட எல்லாரும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மழை காரணமாக தேர்ச் சக்கரங்கள் சேற்றில் அழுந்தியிருந்ததால் தேர் சிறிதும் நகரவில்லை. இதைக் கண்டு மன்னர் மனம் வருந்தியிருக்கும்போது, "சேந்தா! நீ பல்லாண்டு பாடு' என்று ஒரு அசரீரி கேட்டது.

அங்கிருந்த சேந்தனார் இறைவனை வேண்டி அவர் அருளால், "மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள் வஞ்சகர் போயகல' என்று தொடங்கி, "பல்லாண்டு கூறுதுமே' என்று முடித்து இறைவனை வாழ்த்தி 13 பாடல்களைப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது.

சேந்தனாரை அடையாளம் கண்ட மன்னர், தாம் கண்ட கனவை அவரிடம் கூறினார்.

சேந்தனார் வீட்டுக்கு களியுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம் ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள். இதை உணர்த்தும் வகையில் இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.