“நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்
தெறுகதிர் கனலி வெம்மை தாங்கிக்
கால் உணவாகச் சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும் மருள கொடுஞ்சிறைக்
கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீ இத்
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்”
---புறம் 43 தாமப் பல் கண்ணனார்
“செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர் விடுபு
வண்புகழ் இறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள்
விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியத்
ஒரு கை உக்கம் சேர்த்தியது ஒரு கை”
------திருமுருகாற்றுப்படை 106-109
“சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும்
இடர்கெட அருளும் நின் இணை அடி தொழுதேம்
அடல் வலி எயினர் நின் அடிதொடு கடனிது”
----சிலப்பதிகாரம் (வேட்டுவ வரி 15.அவிப் பலி)
“வசை தவிர் ககன சரசிவ கரண
மகாவ்ருத சீல சால வரமுனி சித்தரை
அஞ்சல் என்று வாழ்வித்து நின்றன”
---அருணகிரிநாதர் (புயவகுப்பு)
வாலகியர்கள் எனப்படும் 60,000 குள்ள முனிவர்கள் பற்றி ரிக் வேதமும் தமிழ் நூல்களும் சுவையான பல செய்திகளைத் தருகின்றன. ரிக் வேதத்தின் எட்டாவது மண்டலத்தில் பிற்சேர்க்கையாக 11 பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவைகளைப் பிற்சேர்க்கை என்பதால் வேதத்துக்கு உரை எழுதிய சாயணர் இந்தப் பகுதிக்கு உரை எழுதவில்லை. ஆனால் ராமாயணம், மஹாபாரதம் மற்றும் புராணங்களில் இவர்களுடைய வரலாறு உள்ளது.இவர்களுடைய வரலாற்றில் பல வியப்பூட்டும் விஷயங்கள் இருக்கின்றன.
ஆங்கிலத்தில் ஜோனதன் ஸ்விப்ட்(Gulliver’s Travels by Jonathan Swift) என்பவர் கல்லிவரின் பயணம் என்ற ஒரு நாவலைப் படைத்தார். கல்லிவர் தனது பயணத்தில் லில்லிபுட் என்ற நாட்டுக்குப் போனபோது எல்லோரும் விரல் அளவுக்கே இருந்ததால் அந்த இடத்தில் கல்லிவர் என்ன என்ன சாஹசங்கள் செய்தார் என்று கதை மிக சுவையாகப் போகும். அந்தக் கதைக்கான கருத்தை ஜோனதன் ஸ்விப்ட் நமது வேதத்திலிருந்தும் இதிஹாசங்களிலிருந்தும் எடுத்தார் என்றே தோன்றுகிறது. அந்தக் காலத்தில் இந்தியாவைப் பற்றி ஆங்கில நாளேடுகள் நிறைய செய்திகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு சுவையான விஷயம் பூமியிலுள்ள மக்களைக் கதிரவனின் கடுமையான கதிர்களிலிருந்து காப்பது இந்த முனிவர்கள்தான் என்று படிக்கும்போது சில அறிவியல் உண்மைகள் தெரியவருகின்றது. சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் மனிதன் மீது அதிகமாகப் பட்டால் தோலில் புற்று நோய் உள்பட பல நோய்கள் ஏற்படும். ஆக சூரிய வெம்மை மனிதன் மீது அதிகம் படக்கூடாது என்பதை அவர்கள் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதியதே வியப்பான விஷயம்தான். அத்தோடு நிற்காமல் இந்த முனிவர்கள் 60,000 பேர் வெம்மையை தாங்களே வாங்கிக் கொண்டு நம்மைக் காப்பதற்காக தினமும் சூரியனுடன் சுற்றிவருவதாக எழுதியிருப்பது இன்னும் அதிசயமாக இருக்கிறது. இவர்களை நம்மை புற ஊதாக் (ultra violet rays) கதிர்களிலிருந்து பாதுகாக்கும் ஓசோன் வளையத்துக்கு (ozone layer) ஒப்பிட்டால் அது மிகையாகாது
வடமொழி நூல்களில் சுவையான புராணக் கதைகள் மட்டுமே இருக்கின்றன. ஆனால் தமிழில் சில பாட்டுகளுக்கு உரை எழுதியோர் அறிவியல் உண்மைகளை மிகத் தெளிவாக எழுதியுள்ளனர்.
யார் இந்தக் குள்ளர்கள்?
இவர்கள் க்ரது என்பவருக்குப் பிறந்தவர்கள். தாயின் பெயர் கிரியை.பிரம்மாவின் மானச புத்திரர்கள் என்றும் அழைக்கப் படுவர். இவர்கள் கட்டை விரல் உயரம் தான் இருப்பார்கள். ஆனால் தேஜோ (ஒளி) மயமானவர்கள். முற்றும் துறந்த இவர்கள் மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டே தவம் செய்வார்கள். 60,000 எண்ணிக்கையுடைய இவர்கள் சூரியனுக்கு முன் அவனுடன் பயணம் செய்வார்கள்.
ஒரு முறை காச்யப முனிவர் தனது 2 மனைவிகளுக்கு குழந்தைப் பேறு கிடைக்க ஒரு யாகம் ஏற்பாடு செய்தார். அதில் இந்திரன் உள்பட அனைத்து தேவர்களும் முனிவர்களும் உதவிக்கு அழைக்கப் பட்டனர். இந்திரன் முதலானோர் வேகம் வேகமாக பெரிய விறகுகளை யாகத்தீக்கு கொண்டுவந்தனர். ஆனால் குட்டை வாலகில்யர்களோ ஒவ்வொரு இலை இலையாகக் கொண்டுவந்தனர். அத்தோடு சிறு சிறு குழிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரில் விழுந்தும் புரண்டும் வந்தனர். இதைப் பார்த்த இந்திரனுக்கு சிரிப்பு தாங்கவில்லை. சத்தம் போட்டு சிரித்து விட்டான்.
(இதுபோன்ற நகைச்சுவைக் கருப்பொருளை ‘காப்பி’ அடித்துதான் ஒரு கற்பனை நாவலை எழுதிவிட்டார் ஜோனதன் ஸ்விப்ட்).
வாலகீல்யர்களுக்கு பயங்கரக் கோபம் வந்தது. நாம் ஒரு புதிய இந்திரனைப் படைப்போம் என்று முடிவு எடுத்தனர். இந்திரன் நடு நடுங்கிப் போய் விட்டான். ஓடிப்போய் காஸ்யபரிடம் நடந்த அனைத்தையும் கூறினான். “வாலகீல்யர்கள் சக்தி வாய்ந்த தவசீலர்கள் அவர்கள். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரியது. ஆனால் ஏதேனும் சமாதானம் செய்து மாற்று வழி கண்டுபிடிக்கிறேன்“ என்று காஸ்யபர் பதில் சொன்னார். பின்னர் வாலகீல்யர்களிடம் போய் இந்திரன் பயந்து நடுங்குகிறான் என்று கூறி புது இந்திரனைப் படைக்காதீர்கள் என்றும் நீங்கள் பறவைகளுக்கு இந்திரனான கருடனைப் படையுங்கள் என்றும் மன்றாடினார். வேறு ஒரு நேரத்தில் இந்திரனைத் தோற்கடிக்க வகை செய்வதாகவும் சொல்லி சமாதானப் படுத்தினார்.வாலகில்யர்கள் தனியாக யாகம் செய்தனர்.
இந்த சமாதான உடன்படிக்கையின்படி காஸ்யபரின் ஒரு மனைவீக்கு வாலகீல்யர்களின் யாகப் பிரசாதம் கொடுக்கப்பட்டது. அதைச் சாப்பிட்ட வினதை என்னும் மனைவி அருணனையும் கருடனையும் பெற்றெடுத்தாள். மற்றொரு மனைவியான கத்ரு வேறு ஒரு யாகப் பிரசாதத்தை சாப்பிட்டு நாகர்களைப் பெற்றெடுத்தாள். மற்றொரு தருணத்தில் கருடன் இந்திரனைத் தோற்கடித்து அமிர்தத்தைக் கொண்டுவந்து பழி தீர்த்துக் கொண்டான்.
திருமுருகாற்றுப் படைக்கு உரை எழுதிய கி.வா.ஜகந்நாதன் அவர்கள் வேறு ஒரு விஷயத்தையும் கூறுகிறார். மந்தோகருணர் என்று அழைக்கப்படும் அசுரர்கள் சூரியனுக்கு தினமும் தீங்கு செய்வதாகவும் அந்தணர்கள் நாள்தோரும் மூன்று வேளைச் சந்தியாவந்தனத்தில் கொடுக்கும் அர்க்யம் (நீர்) இந்த அசுரர்களை வீழ்த்த சூரியனுக்குத் துணைசெய்கிறது என்றும் கூறுகிறார். இந்த மந்தோகருண அசுரர்கள் சூரியன் வீசும் புற ஊதாக் கதிர்களா (ultra violet rays) அல்லது காந்த அலைகளா (magnetic storms and solar flares) என்பதை மேலும் ஆராயவேண்டும்.
மேற்கோள் காட்டிய பாடல்களின் பொருள்:
சூரியனுக்கு உதவும் வாலகில்யர்களுக்கு முருகப் பெருமான் ஒரு கையால் அருள் புரிகிறார் என்று திருமுருகாற்றுப் படை கூறுகிறது.
புறநானூற்றில் வேறு ஒரு கதை: சோழன் நலங்கிள்ளியின் தம்பியாகிய மாவளத்தானை தாமப் பல் கண்ணனார் பாடுகையில் சோழர்களின் முன்னோனாகிய சிபிச் சக்கரவர்த்தி ஒரு புறாவுக்காக எப்படி தன்னையே தந்தார் என்று கூறிவிட்டு சிபியின் பெருமையைச் சுடரொடு திரிதரும் வாலகில்ய முனிவர்களோடு ஒப்பிடுகிறார்.அந்த முனிவர்களுக்குக் காற்றுதான் உணவு என்றும் புறநானூறு கூறுகிறது.
சிலப்பதிகாரதில் வேடர்கள் பாடுகையில் வானிலே திரிபவரான முனிவரரும் அமரரும் இடர்கெடுமாறு அருளுகின்ற நின்பாதங்களைத் தொழுதோம் என்று எயினர்கள் துர்க்கா தேவியின் (கொற்றவை) புகழ் பாடுகின்றனர். இது அடியார்க்கு நல்லார் எழுதிய உரையாகும். அருணகிரிநாதரும் இம் முனிவர்களைப் பாடிப் பரவுகின்றார்.
ஆக அடியார்க்கு நல்லாரும் நச்சினார்க்கினியரும் கூறும் புதிய விஷயங்கள் வேத, இதிஹாச, புராணக் குறிப்புகளுக்கு முத்தாய்ப்பாக அமைந்துள்ளன என்று சொல்லலாம்.