பாண்டிய நாட்டில் அமைந்துள்ள திருத்தலம் மணமேற்குடி! இத்திருநகரில், சிவனடி போற்றும் தவசீலர்கள் பலர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்குள் உயர் குடியில் பிறந்த குலச்சிறையார் என்பவரும் ஒருவராவார். இளமை முதற்கொண்டே முக்கண்ணரின் பாத கமலங்களில் தம் சித்தத்தை செலுத்தி, சிவனடியார் களுக்குத் திருத்தொண்டு புரிவதில் திண்மையையும், உண்மையையும் உடையவராய் விளங்கினார். தொண்டர்களின் திருவடியே பேரின்ப வீடு பேற்றிற்குப் பாதை காட்டும் நன்னெறி என்பதனை உணர்ந்தார். தம்மை வந்தடையும் அடியார்கள் எக்குலத்தவராயினும் வேற்றுமை பாராது, சிவமாகவே கருதி வழிபட்டு வந்தார். உயிரை வளர்த்துப் பக்தியைப் பெருக்கும் சமய ஞானமே
சகல நலங்களுக்கும் ஆணிவேர் போல் விளங்குகிறது. அத்தகைய சமயஞானமற்ற வாழ்வு அஸ்திவாரமில்லா கட்டிடம் போலாகும் என்ற சமயக் கொள்கையின் சிறப்பினை நன்கு கற்றுத் தெளிந்திருந்த வித்தகர் குலச்சிறையார். இவர் மதுரையை ஆண்டு வந்த நின்றசீர் நெடுமாறனிடம் தலைமை அமைச்சராய்ப் பணியாற்றி வந்தார்.
இத்தொண்டர் அமைச்சராகப் பணிபுரிந்து வரும் நாளில் பாண்டிய நாட்டில் சமணர்கள் தங்கள் ஆதிக்கத்தைப் பரப்ப பல வழிகளில் முயன்றார்கள். குலச்சிறையாரும் சைவ மதக் கொள்கைகளை விடாமல் பற்றிக் கொண்டு ஒழுகினார். அத்தோடு சமணக் கொள்கைகளை மண் மூடுவதற்கு உறுதுணையாகவும் இருந்தார். பாண்டியமாதேவியாருடைய ஒப்பற்ற சிவத்தொண்டிற்கு உண்மைத் தொண்டராகி பணியாற்றினார் குலச்சிறையார். குலச்சிறை நாயனார் திருஞான சம்பந்தரை மதுரைக்கு எழுந்தருள செய்து, சைவ மதத்தின் கொள்கையை உலகறியச் செய்தார். குலச்சிறையாரை சுந்தரமூர்த்தி சுவாமிகளும், ஒட்டக்கூத்தரும் பெருநம்பி குலச்சிறையார் என்று பதிகங்களில் பாராட்டியுள்ளார்கள். இவ்வாறு சிவநாமத்தைச் சித்தத்தில் பதிய வைத்து சைவ நெறியை உலகமெல்லாம் பரப்பிட வாழ்ந்து காட்டிய குலச்சிறையார் இறுதியில் எம்பெருமானின் தூய மலர்ப் பாதகமலங்களைப் பற்றி வாழும் பேரின்பத்தைப் பெற்றார்.