சோதனைகள், பிரச்சினைகள், இடையூறுகள் வந்தால் அவைகளைக் கண்ணன் தீர்க்கும் வழி தனி வழி. மகாபாரதக் கதைகளை கேட்டவர்களுக்கு நூற்றுக் கணக்கான உதாரணக் கதைகள் நினைவுக்கு வரும். இது கண்ணன் பற்றிய ஒரு பாகவதக் கதை.
கண்ணனும் சாத்யகியும் இணை பிரியா நண்பர்கள். இருவரும் யாதவ குல திலகங்கள். ஹஸ்தினாபுரத்துக்கு தூது சென்றபோதும், யுதிஷ்டிரனின் ராஜசூய யாகத்துக்குச் சென்றபோதும் கண்ணனுடன் சென்றவன் சாத்யகி. மாபாரதப் போரில் 18 நாட்களும் போரிட்டவன். பாண்டவர்களின் ஏழு படைப் பிரிவுகளில் ஒரு படைக்கு தளபதி.
Raja Ravivarma’s Painting shows Krishna and Sathyaki in Kaurava court
ஒரு நாள் கண்ணனும் சாத்யகியும் தொலைதூரப் பயணம் சென்றனர். பாதி வழியில் இருட்டிவிட்டது. இருவரும் நடுக் காட்டில் கூடாரம் அடித்துத் தங்கினர். யார் பாதுகாவல் காப்பர்கள் என்று ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர். நாலு ஜாமம் கொண்ட இரவில் மாறி மாறி ஒவ்வொரு ஜாமத்தையும் ஒருவர் காப்பது என்று உடன்பாடு ஆயிற்று.
முதல் ஜாமத்தில் சாத்யகி காவல் காத்தார். அப்போது ஒரு பூதம் அவனைத் தாக்க வந்தது. சாத்யகி மாவீரன். கோபமும் வீரமும் கொந்தளிக்க பூதத்தைத் தாக்கினான். இவன் தாக்கத் தாக்க பூதம் மேலும் பலம் அடைந்தது, உருவத்தில் பெரிதாகிக் கொண்டே வந்தது. இதற்குள் முதல் ஜாமம் முடியவே, கண்ணன் காவல் காக்க வெளியே வந்தான்.
ஒன்றுமே நடக்காதது போல பாவனை செய்துகொண்டு சாத்யகி தூங்கப் போய்விட்டான். அதே பூதம் கண்ணனுடன் மோதியது. கண்ணன் கோபத்தையும் வீரத்தையும் காட்டாமல் அன்பே, ஆருயிரே, என் செல்லமே என்று பூதத்தைத் தட்டிக் கொடுத்தான். கண்ணன் அன்போடு தட்டத் தட்ட பூதம் சுருங்கிக் கொண்டே போயிற்று. இதற்குள் மூன்றாம் ஜாமம். உடனே சாத்யகி மீண்டும் காவல் காக்க வந்தான். கண்ணனை ஏற இறங்கப் பார்த்தான். அடி வாங்கிய சுவடே இல்லை. வாரிய தலை கூட கண்ணனுக்குக் கலையவில்லை. விஷமக் கார கண்ணன் முதல் ஜாமத்தில் நடந்தது என்ன என்று ஊகித்தறிந்தான்.
கண்ணன் தூங்கபோன உடனே பூதம் வந்தது, மீண்டும் சண்டை, அடி தடி, குத்து, வெட்டுதான். சாத்யகிக்கு செமை அடி. அவன் தாக்கத் தாக்க பூதம் பெரிதாகியது. சாத்யகிக்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது. கண்ணனை உதவிக்கு அழைத்தால் அவமானம்.. நல்ல வேளையாக அந்த ஜாமம் முடிவுக்கு வரவே கண்ணன் காவல் காக்க வந்தான். எல்லாம் பழைய கதைதான். பூதத்தைப் புகழ்ந்து புகழ்ந்து தட்டிக் கொடுத்தான். கண்ணன் அன்போடு தட்டத் தட்ட பூதம் சுருங்கிக் கொண்டே போயிற்று அவன் அதைப் பிடித்து வேட்டியில் ஒரு ஓரத்தில் கட்டிக் கொண்டு முடிச்சுப் போட்டுவைத்தான். உள்ளே போய், “சாத்யகி விடிந்துவிட்டது. நாம் பயணத்தைத் துவங்கவேண்டும்” என்று கூறினான்.
சாத்யகிக்கு ஒரே ஆச்சர்யம். இது என்ன? அந்த பூதம் என்னிடம் மட்டும்தான் வாலாட்டியதா? கண்ணனிடம் வரவே இல்லையா? என்று நினைத்துக் கொண்டு மெதுவாக கண்ணனிடம் பேச்சுக் கொடுத்தான். “கண்ணா, இரவில் ஏதேனும் நடந்ததா? காவல் காப்பதில் ஏதேனும் பிரச்சினை இருந்ததா?” என்றான் மெதுவாக.
கண்ணனுக்குதான் சுற்றிவளைத்துப் பேசத் தெரியாதே! “ஓ, நீ பூதம் பற்றிக் கேட்கிறாயா? இதோ பார் இதுதான் என்கூட இரவில் சண்டைக்கு வந்தது என்று வேட்டியின் முடிச்சை அவிழ்த்து பூதத்தைக் காட்டினான். சாத்யகியுடன் சண்டை போட்ட அதே பூதம்! சாத்யகிக்கு ஆச்சர்யம் எல்லை கடந்துபோனது. அவன் கேள்வி கேட்பதற்கு முன்னர் கண்ணனே பதில் கூறிவிட்டான்.
“இதோ பார் சாத்யகி, ஒரு பிரச்சினை அல்லது கோபம் வரும்போது அதைப் பெரிதாக்குவது நாம்தான். அதையே நினைத்து நினைத்து ,அதனுடன் மோத மோத அது பெரிதாகிவிடும். அதே கோபத்தையோ பிரச்சினையையோ ஆற அமர சிந்தித்து ஆத்திரப் படாமல் சிந்தித்தால் பிரச்சினை சிறிதாகிவிடுமென்று சொல்லிக் கொண்டே கண்ணன் அந்த குட்டி பூதத்தைக் காட்டுக்குள் தூக்கி எறிந்தான். அது உருண்டு ஓடி விட்டது.
ஆங்கிலத்தில் பூதத்தை உண்டாக்கி சண்டை போடுவது என்ற சொற்றொடரே (Creating a Phantom and fighting with it) இருக்கிறது. ஆக பிரச்சினையோ சோதனையோ வந்தால் அமைதியாகத் தட்டிக் கொடுங்கள். அது உங்களுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு ஓடிப்போய்விடும்.