சோழநாட்டில் உள்ள சீர்காழியில் தோன்றியவர் கணநாதர். இவர் வேதிய குலத்தைச் சேர்ந்தவர். இல்லற வாழ்க்கையை ஏற்றுக் கொண்டவர். திருத்தோணி சிவபெருமானுக்கு திருத்தொண்டு செய்து வருபவர்.
திருநந்தவனப் பணி செய்வோர், மலர் கொய்வோர், திருமாலை கட்டுவோர்., திருமஞ்சனம் எடுப்போர், திரு அலகிடுவோர், திருமெழுகிடுவோர், திருவிளக்கேற்றுவோர், திருமறை எழுதுவோர், ஓதுவோர் முதலிய திருத்தொண்டர்களுக்கு குறைகள் ஏற்பட்டால் அவற்றை நீக்குவார்.
இத்தகைய திருத்தொண்டுகளில் மக்களை ஈடுபடுத்தி அவர்களையும் திருத்தொண்டர்களாக்குவார். மேலும், இவர் திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகளை எப்பொழுதும் பேரன்போடு வழிபட்டு வந்தார். அதனால் இவர் திருக்கயிலையை அடைந்து சிவகணங்களுக்குத் தலைவரானார். அன்று முதல் இவர், கணநாத நாயனார் என்றே அழைக்கப்படுகிறார்.