ஆதி சங்கரர் கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்தாரா அல்லது கிறிஸ்துவுக்குப் பின்னுள்ள காலத்தில் வாழ்ந்தாரா என்பது புரியாத புதிராகவே நீடிக்கிறது. அவருடைய காலம் கி.மு.வா, கி.பி.யா என்பதில் கருத்து வேறு[பாடு உண்டு. இதற்குக் காரணம் ஆதி சங்கரர் என்ன என்ன சாதனைகளைச் செய்தாரோ அதே போல பெரும் சாதனைகளைச் செய்த ஒரு மஹான் அவதரித்து எல்லோரையும் வியப்புக்குள்ளாக்கியதே. அவர்கள் பழைய சங்கரரே புது அவதாரம் எடுத்து வந்ததாக நம்பி, அவருக்கு புதிய சங்கரர் –-“அபி நவ சங்கரர்” (மீண்டும் புதிய சங்கரர் ) என்று பெயர் சூட்டினார்கள். எப்படி போப்பாண்டவர், தலாய்லாமா எனபது பட்டப்பெயர்களோ அதே போல சங்கராசார்யார் என்பது பட்டப் பெயர். ஆகையால் அவர் செய்த ஸ்லோகங்களையும் சங்கராசார்யார் செய்தது என்று பொதுப் படையாகச் சொன்னதால் பெரிய குழப்பம் ஏற்பட்டு பழைய சங்கரரும் இவரும் ஒன்றே என்று கருதி கி.பி.788 என்று கூறிவிட்டார்கள். உண்மையில் அப்போது வாழ்ந்தவர் அபினவ சங்கரர். ஆதி சங்கரர் இவருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்.

காஞ்சி மஹா பெரியவர் தனது நீண்ட உரையில் ஆதி சங்கரர் கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் வாழந்தவர் என்பதை நிரூபித்துள்ளார். தெய்வத்தின் குரல் புத்தகத்தில் இதைப் படிக்கலாம். அதையே மீண்டும் சொல்லாதபடி சில புதிய சான்றுகளை மட்டும் முன்வைத்து அவர் கூறியது சரியே என்று நிரூபிப்பேன்.

சங்கரரின் சவுந்தர்ய லஹரியில் (பாடல் 75) வரும் “திராவிட சிசு” என்ற சொற்களை திருஞான சம்பந்தரைப் பற்றி ஆதி சங்கரர் கூறியது என்று ஒருவர் முதலில் கதை கட்டி விட்டார். உண்மையில் திராவிட சிசு என்பது ஆதி சங்கரர் பற்றி அபிநவ சங்கரர் கூறிய புகழ் மொழியே.

இது தவிர சம்பந்தர் எப்படி தன்னையே தனது பாடல்களில் புகழ்ந்து கொண்டாரோ அப்படியே சங்கரரே இப்படி தன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டார் என்றும் வாதாட முடியும். இப்படி ஒரு முன் உதாரணம் இருந்ததால்தான் சிறு பாலகனான சம்பந்தரும் தன்னையே ஆங்காங்கு புகழ்ந்துகொண்டார். சங்கரரும் சம்பந்தரும் சிவன், முருகன் ஆகியோரின் மறு அவதாரம் எனக் கருதப்படும் மாபெரும் புனிதர்கள். ஏசு கிறிஸ்துவும் கூட பைபிளில் இப்படி தன்னையே படிப்படியாக உயர்த்திக் கொண்டே போவதை விவேகானந்தர் குறிப்பிட்டு ஏசு அத்வைத போதனையை படிப்படியாக மக்களுக்கு உணர்த்தியதாகக் குறிப்பிடுவார்.

நேபாள நாட்டில் கிடைத்த ஒரு சுவடியில் ஆதி சங்கரர் தன்னையே இப்படி திராவிட சிசு என்று சொல்லிக் கொண்டதாகவும் இருக்கிறது. இது தவிர சவுந்தர்ய லஹரியிலும் பாதியை ஆதி சங்கரர் இயற்றவில்லை என்பதும் அது தொடர்பான கதையில் ஏற்கனவே உள்ளது.

நான்கு முக்கிய சான்றுகள்

உபநிஷதம், பிரம்ம சூத்திரம் முதலிய பாஷ்யங்களை எழுதியவர் ஆதி சங்கரர் என்றும் எளிய சம்ஸ்கிருத ஸ்லோகங்களை எழுதியவர் அபிநவ சங்கரர் அல்லது அதற்கும் பின் பட்டம் ஏறிய சங்கராசார்யார்கள் என்றும் கொண்டால் தவறில்லை.

சான்று 1

ஆதி சங்கரரின் முக்கிய உவமை அல்லது உதாரணம் கயிறு- பாம்பு உவமையாகும். இதை கி.மு.360-270ல் வாழ்ந்த பைரோன் என்ற கிரேக்க அறிஞரும் பயன்படுத்துகிறார். அவர் அலெக்ஸாண்டருடன் வந்தவர். சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாடில், அவரது மாணாக்கரான அலெக்சாண்டர் ஆகிய அனைவரும் இந்திய தத்துவ ஞானத்தின் மீது கொண்ட பெருமதிப்பை அறிஞர் உலகம் நன்கு அறியும். இதற்கு மறுக்க முடியாத சான்றுகள் உள்ளன. ஆகையால் பைரோனும் சங்கரரின் உதாரணத்தைப் பயன்படுத்தினார் என்று சொல்லலாம். அவருக்கு முன் சங்கரர் வாழ்ந்ததை இது காட்டுகிறது. திருமூலரும் கயிறு-பாம்பு உவமையைப் பயன்படுத்துகிறார்.

இந்த உவமை சங்கத்தமிழ் நூலான அகநானூற்றிலும் இருக்கிறது (அகம் 68, ஊட்டியார்)

அசோக மரத்தில் ஊஞ்சல் கட்டிய கயிற்றைப் பாம்பு என்று எண்ணி இடி தாக்கியது என்று ஊட்டியார் என்னும் புலவர் பாடுகிறார்.

ஓங்கு சினை தொடுத்த ஊசல் பாம்பு என
முழு முதல் துமிய உரும் எறிந்தன்றே (அகம் 68)

சான்று 2

காஞ்சி மகாஸ்வாமிகள் போகும்போது அவருடைய பக்தர்கள் “ஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர” என்று கோஷமிட்டுச் சென்றதைப் பலரும் பார்த்திருப்பீர்கள். இது இன்றோ நேற்றோ தோன்றிய வழக்கம் அல்ல. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக உள்ள வழக்கம். அதாவது சங்கரர் மூலமாக 2000 ஆண்டுகளாகப் பரப்பப்பட்ட விஷயம். இதை அப்பர் தனது பாடலில் “சய சய சங்கரா போற்றி” என்று பாடுகிறார். ஆகையால் அப்பர். சம்பந்தர் ஆகியோருக்கு முந்தியவர் ஆதி சங்கரர்.

சங்கரர் என்ற சிவ நாமத்தை தேவார மூவரும் அவர்களுக்கு முன் உதித்த மாணிக்க வாசகரும் பாடுகின்றனர். மாணிக்கவாசகர் காலம் தேவார மூவருக்கு முந்திய காலம் என்பது என் நீண்ட ஆராய்ச்சியில் கண்ட ஒரு முடிவு (அதை தனி கட்டுரையில் காண்க) மாணிக்கவாசகர் கணபதி (விநாயகர்) பற்றிப் படாததே அவரது காலத்தைக் காட்டிவிடுகிறது. மேலும் அப்பரும் நரியைப் பரியாக்கிய திருவிளையாடல், தருமிக்கு பொற்கிழி அளித்த திருவிளையாடல் ஆகியவற்றைப் பாடி நமக்கு பல வரலாற்று உண்மைகளைப் போகிற போக்கில் தெரிவிக்கிறார்.

அப்பர் “தோத்திரங்கள் பாடும் அடியார்கள்” என்று கூறுவது யாரை என்று ஆராய வேண்டும். தூய தமிழில் பதிகம் பாடிய பெரியோரை இப்படி தோத்திரங்கள் என்ற சம்ஸ்கிருத சொல்லால் கூறியிருக்க மாட்டார். ஆதி சங்கரர்தான் கனகதாரா ஸ்தோத்திரம் முதலியன செய்து புகழ் பெற்றார். ஆகவே அவரை மனதில் கொண்டே இப்படி தோத்திரங்கள், கீதங்கள் என்ற வட சொற்களை சைவப் பெரியார்கள் நால்வரும் பாடியிருக்க வேண்டும்.

(ஆதீ சங்கர, செய செய சங்கர என்று ஒரே பாட்டில் வருவதைக் காண்க)

“நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே----
தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடி
சங்கரா செய போற்றி போற்றி என்றும்
அலை புனல் சேர் செஞ்சடையெம் ஆதீ என்றும்
ஆரூரா என்று என்றே அலறா நில்லே”

மாணிக்க வாசகரின் திருவாசகத்தில் உபநிஷத்தின் சாரங்களும் சங்கரரின் போதனைகளும் மிக மிக அதிகம் காணப்படுகிறது.

சான்று 3

சங்கரர் கி.பி.788ல் அவதரித்திருந்தால் அவருக்கு புத்த மதத்தையும் சமண மதத்தையும் எதிர்த்துப் போராடவேண்டிய தேவையே இல்லை. ஏனெனில் அந்த இரண்டு மதங்களும் சுங்க வம்சத்து, குப்த வம்சத்து, சதகர்ணி வம்சத்து அரசர்களால் 90 சதவிகிதம் அழிக்கப்பட்டுவிட்டது. வன்முறையால் அல்ல. மக்கள் மீண்டும் தாமாகவே தாய் மதத்துக்கு திரும்பிவிட்டார்கள். ஏனெனில் இந்துக்கள் மத மாற்றம் செய்ததாகவோ வன்முறையில் ஈடுபட்டதாகவோ எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. காமாலைக் கண்களுடன் இந்திய வரலாற்றைப் பார்க்கும் மேலை நாட்டினர் கூட அப்படி எழுதவில்லை. தென்னாட்டில் மட்டும் புத்த, சமணர்களுக்கு இருந்த செல்வாக்கைத்தான் தேவார முதலிகளும் ஆழ்வார்களும் ஒடுக்கினார்கள். ஆக புத்த மதத்துடன் வாதிட்டவர் பழைய சங்கரரான ஆதி சங்கரரே.

சான்று 4

மாயம், நிலையாமை ஆகிய சொற்கள் சங்கரரின் பாஷ்யங்களிலும் ஸ்லோகங்களிலும் அதிகமாக வருகின்றன. புறநானூற்றில் பாடல் 363, 366 முதலியவற்றில் மாயம், நிலையாமை ஆகியவற்றை சங்கரர் பாணியில் எடுத்துச் சொல்லி “போகும் வழிக்குப் புண்ணியம் சேருங்கள்” என்ற அறிவுரை உள்ளது. பாடல் வரிகளைக் கீழே காண்க:

“அதனால் நீயும் கேண்மதி அத்தை ! வீ யாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை !
மடங்கல் உண்மை மாயமோ அன்றே:” (புறம் 363 சிறுவெண்டேரையார்)
துறை: பெருங்காஞ்சி
“காவுதோறும்-------------
மடங்கல் உண்மை மாயமோ அன்றே”. (புறம் 366, கோதமனார்)
துறை: பெருங் காஞ்சி

பொருள்: இறப்பது என்பது உண்மை. இதில் மாயம் ஏதும் இல்லை. இதில் இன்னும் ஒரு முக்கிய அதிசியம் இந்த மாதிரிப் பாடல்கள் எல்லாம் பொருண்மொழிக் காஞ்சித் துறையில் அடக்கப் பட்டுள்ளன. காஞ்சி என்ற பெயர் குறிப்பிடத் தக்கது. சங்கரர் முக்தி அடைந்த இடம் அது. பாடிய புலவர் பெயர்கள் எல்லாம் ரிஷி முனிவர்களின் பெயர்கள்! ஒருவேளை சங்கரரின் சீடர்களோ பக்தர்களோ! சிறுவெண்தேரையார் (மண்டூக மகரிஷி), கோதமனார் (கௌதம மஹரிஷி)

மேலும் சில புதிர்கள்

பிரம்ம சூத்திரத்துக்கு சங்கரர் எழுதிய உரையில் பல பெயர்கள் வருகின்றன. இன்று வரை அவர்கள் யார், எந்தக் காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதெல்லாம் ஐயம் திரிபற நிரூபிக்கப்படவில்லை. ஹாலன், மனு குல ஆதித்தன், சுந்தர பாண்டியன்,பூர்ண வர்மன் ஆகிய மன்னர்களின் பெயர்கள். இவர்களுடைய காலத்தை ஆதி அல்லது அபிநவ சங்கரர்களின் காலத்துடன் பொருத்த முயன்றால் “இடிக்கிறது”. ஆக குமாரில பட்டர் காலம் கூட சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் நிரூபிக்கப் படவில்லை. சுந்தர பாண்டியன் அன்னை மீனாட்சி அம்மனை மணந்த சுந்தரேஸ்வரா, மனு குல ஆதித்தன் என்பவன் மனு நீதிச் சோழனா, ஹாலன் என்பவன் முதல் நூற்றாண்டில் ஆந்திரத்தில் இருந்தவனா அல்லது கல்ஹணரின் ராஜ தரங்கிணியில் குறிப்பிடப்படும் கி.மு நாலாம் நூற்றாண்டு ஹாலனா என்று பல்வேறு கேள்விக்குறிகள் தொக்கி நிற்கின்றன.

கம்போடியாவில் இந்திரவர்மன் என்ற மன்னரின் குருவான சிவசோமன் தன்னை பகவான் சங்கரரின் சீடன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான். ஆனால் நமக்குத் தெரிந்தவரை எந்த சங்கரருக்கும் இப்படி ஒரு சீடன் இருந்ததாக சரித்திரம் இல்லை. உண்மையில் சங்கர மடத்தை அலங்கரித்த எவ்வளவோ சங்கரசார்யார்களில் ஒருவரின் சீடராக இருந்திருக்கலாம்.

சிவ பெருமானின் 3 தொழில்களும் 5 தொழில்களும்

மாணிக்க வாசகர், தேவார முதலிகள், சைவ சித்தாந்தப் பெரியோர்கள் யாவரும் சிவ பெருமானின் ஐந்து தொழில்களைக் குறிப்பிடுகின்றனர். ஆனால் காலத்தால் முந்திய சிலப்பதிகாரம் ஆதிசங்கரர் ஆகீயோர் சிவனின் மூன்று தொழில்களை மட்டுமே குறிப்பிடுகின்றனர். ஆக ஆதி சங்கரரின் பழமையை இதுவும் நிரூபிக்கிறது.

காஞ்சி, சிருங்கேரி, பூரி, துவாரகா, ஜோதிர்மட சங்கராசார்யார்களின் எண்ணிக்கையும் வேறுபடுகிறது. துவாரகையில் 79,காஞ்சியில் 69, பூரியில் 140+, சிருங்கேரியில் 36, கூடலியில் 60 சங்கராசார்யார்கள் இருந்திருக்கிறார்கள். எண்ணிக்கையில் ஏன் இவ்வளவு வித்தியாசம்? என்பதும் புரியாத புதிரே.

சீனாவில் சங்கரரின் குருவுக்குக் குருவான கவுடபாதரின் நூல் ஆறாம் நூற்றாண்டிலேயே சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதுவும் சங்கரரின் காலக் கணக்கோடு ஒத்துவரவில்லை.

இனி யாராவது ஒருவர் கம்யூட்டர் மூலமாகாக ஆதி சங்கரரின் பாஷ்ய சொற்களை ஆராய்ந்து அவரது காலத்தைக் கண்டுபிடிக்க முடியுமா என்று பார்க்கவேண்டும். தமிழ் இலக்கியத்திலிருந்து தெரிவது என்னவென்றால் பெரும்பாலோர் கருதும் காலத்துக்கு (கி.பி.788) முன்னாலேயே சங்கரர் வாழ்ந்திருகக்கிறார் என்பதாகும்.

ஜய ஜய சங்கர ! ஹர ஹர சங்கர !!