அதிபத்த நாயனார்
சோழ நாட்டிலே காவிரிப் பூம்பட்டினமும், நாகபட்டினமும் இரு பெரும் நகரங்களாக விளங்கின. அந்நகரங்களில் கப்பல் வாணிபத்தில் வல்லமை பெற்ற நாகப்பட்டினத்தின் கடற்கரை ஓரத்தில் நுழைப்பாடி என்ற இடம் அமைந்திருந்தது.இந்நகரில் வலைஞர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மீன் வியாபாரம் செய்து வந்ததோடு சங்கு, பவழம் போன்ற பொருள்களையும் விற்பனை செய்து வந்தனர்.ஆழ்கடலுள் சென்று மீன் பிடித்ததுவரும் அதிபத்தர் முதல் மீனை இறைவனுக்கு என்று சொல்லி கடலிலேயே விட்டு விடுவதைத் தலைசிறந்த இறை நியதியாகக் கொண்டிருந்தார்.எல்லையில்லாப் பக்தி காரணமாகத்தான் அதிபத்த நாயனார் இவ்வாறு திருத்தொண்டு புரிந்து வந்தார்.இவருடைய அன்பிற்குக் கட்டுப்பட்ட எம்பெருமான் இவரது புகழை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டார். முன்பெல்லாம் ஏராளமான மீன் பிடித்த நாயனாருக்கு இப்பொழுதெல்லாம் எவ்வளவு தான் வலை வீசிய போதும் ஒரே ஒரு மீனுக்கு மேல் கிடைப்பதில்லை. அந்த மீனையும் இறைவனுக்கு என்றே கடலுக்குள் வீசி விட்டு வெறுங்கையோடு வீட்டிற்குத் திரும்புவார். இதனால் இவரது வியாபாரம் தடைப்பட்டது. இதுகாறும் சேர்த்து வைத்திருந்த செல்வம் சிறுகச் சிறுகக் குறையத் தொடங்கியது.ஒருநாள் அதிபத்த நாயனார் வலை வீசிய போது அவரது வலையில் விசித்திரமான ஒரு மீன் கிடைத்தது. சூரிய ஒளியுடன் தோன்றிய அபபொன் மீன் நவமணி இழைத்த செதில்களைப் பெற்றிருந்தது. வலைஞர்கள் அதிபத்தரிடம் இந்த பொன்மீனைக் கொண்டே இழந்த செல்வத்தை எல்லாம் மீண்டும் பெற்று வறுமை நீங்கி சுபிட்சமாக வாழலாம் என்றார்கள். அதிபத்தர் அவர்களது வார்த்தைகளுக்குச் சற்றும் செவிசாய்க்கவில்லை.எம்பெருமானுக்கு அளிக்கப் பொன் மீன் கிடைத்ததே என்ற மட்டில்லா மகிழ்ச்சியோடு இறைவனை நினைத்தவாறு அப்பொன் மீனைக் கடலிலே தூக்கி எறிந்தார்.அதிபத்தரது பக்தியின் திறத்தினைக் கண்டு அனைவரும் வியந்து நின்றனர். வானத்திலே பேரொளி பிறந்தது.இறைவன் உமையாளுடன் விடை மீது காட்சி அளித்தார். சிவபுரியிலே தமது திருவடி நீழலை அடைந்து வாழும் பேரின்பத்தை அதிபத்த நாயனாருக்கு அருளி மறைந்தார் எம்பெருமான்.
புகழ்த்துணை நாயனார்
செருவல்லிப்புத்தூர் என்னும் தலத்திலே தோன்றியவர் தான் புகழ்த்துணையார் என்னும் சிவத்தொண்டர். இவர் செருவல்லிப்புத்தூரில் எழுந்தருளியிருக்கும் இறைவனை ஐந்தெழுத்து மந்திரத்தை இடையறாது ஓதி சிவாகம முறைப்படி வழிபட்டு வந்தார். ஒருமுறை நாடு முழுவதும் பஞ்சம் ஏற்பட மக்கள் கோயிலுக்குப் போவதைக்கூட நிறுத்திவிட்டு, உணவு கிடைக்கும் இடம் எங்கே? என்று தேடித் தேடி அலைந்தனர். ஆனால், ஈசனடியில் நேசம் வைத்த புகழ்த்துணையார் மட்டும், பஞ்சத்தைப் பெரிதாக எண்ணாமல், எம்பெருமானை எப்பொழுதும் போல் பூசித்து வரலானார். ஒருநாள் இவ்வடியார் சிவலிங்கத்துக்குத் திருமஞ்சனம் செய்து வழிபடுகையில் உடல் தள்ளாமையினால் குடத்தைத் தவறவிட்டார். சிவலிங்கத்தின் மீது விழுந்தார். சிவலிங்கத்தின் மீது நாயனார் தலை மோதியதால் வலி தாங்காமல் மயக்கமுற்றார். எம்பெருமான் இவரது மயக்க நிலையை உறக்க நிலையாக்கினார். எம்பெருமான் நாயனாரது கனவிலே எழுந்தருளினார். பஞ்சத்தால் மக்கள் நாடு நகரம் துறந்து சென்றபோதும் நீ மட்டும் எம்மையே அணைந்து எமக்காக வழிபட்டு பணியாற்றியமைக்காக யாம் உமக்கு பஞ்சம் நீங்கும்வரை எமது பீடத்தில் உமக்காகப் படிக்காசு ஒன்றை வைத்து அருள்கின்றோம் என்று திருவாய் மலர்ந்து அருளினார் அரனார். துயிலெழுந்த தொண்டர் பீடத்திலிருந்த பொற்காசு கண்டு சிந்தை மகிழ்ந்து, சங்கரரின் சேவடியைப் பணிந்தார். முன்போல் இறைவனுக்குத் திருத்தொண்டு புரியலானார். பஞ்சம் வந்த காலத்தும் பக்தியில் நின்றும் சற்றும் வழுவாமல் வாழ்ந்த நாயனார், பல்லாண்டு காலம் பூவுலகில் வாழ்ந்து பகவானின் திருவடியைச் சேர்ந்தார்.
சோழவள நாட்டில் உள்ள சிவத்தலங்களில் ஒன்றான திருநீடுர் பதியில் வீர வேளாளர் குடியிலே முனையடுவார் நாயனார் வாழ்ந்து வந்தார். இவர் போர் வீரர்களுக்குத் தலைவராக இருந்து வந்தார். இவர், தம்மோடு வீரமிக்க வேறு சில வீரர்களையும் சேர்த்துக்கொண்டு வீர அணி ஒன்றை அமைத்து வைத்துக்கொண்டு இருந்தார். தங்களை நாடி வரும் மன்னருக்கு உதவியாக களம் சென்று அம்மன்னர்க்கு வெற்றியைத் தேடித் தருவார். இஃது ஒரு பழங்கால வழக்கம். இவ்வழக்கத்தையே தமது தொழிலாலக் கொண்டு, வாழ்ந்து வந்த முனையடுவார் தமக்கு கிட்டிய ஊதியத்தைச் சிவன் கோயில் திருப்பணிக்கும், சிவனடியார்கள் திருத்தொண்டிற்கும் பயன்படுத்தினார். திருநீடுர்ப்பெருமான் பேரருளால் பொன்னும் பொருளும் புகழும் சேர்ந்தது. அத்தனையும் ஆண்டவனுக்கும் அடியவர்க்கும் செலவிட்டார். உலகில் பல்லாண்டு காலம் சிவத்தொண்டு புரிந்து வாழ்ந்தார