தீபாவளியை முன்னிட்டு இந்த வருடம் லண்டனில் சவுத் இந்தியன் சொசைடி (எஸ் ஐ எஸ்) கலை நிகழ்ச்சிகள் வெம்ப்ளியில் விமரிசையாக நடந்தேறியது. இந்நிகழ்ச்சியில் எஸ் ஐ எஸ் உறுப்பினர்களின் குழந்தைகள் பங்கு பெற்று தங்கள் கலை ஆர்வத்தை காட்டி அசத்தினர்.
இம்முறை உறுப்பினர்கள் அனைவரையும் தீபாவளி லேகியத்துடன் வரவேற்று அசத்தினர் எஸ் ஐ எஸ் குழுவினர்.
ஆறு வயது ஆதித்யாவும் பத்து வயது ஹம்சினியும் இணைந்து கடவுள் வாழ்த்துடன் நிகழ்ச்சிகளை இனிதே துவக்கினர். தொடர்ந்து குழந்தைகளின் கலைத்திறமைகள் ஒன்றொன்றாக அரங்கேறின.
செவிக்கும் விழிக்கும் இனிய விருந்தளிக்கும் வண்ணம் ஒவ்வொரு நிகழ்ச்சியும் அமைந்திருந்தது இந்த தீபாவளி கொண்டாட்டத்தின் தனிச்சிறப்பு. இந்த விழாவின் முக்கிய அம்சமாக வயலின் கச்சேரி அமைந்து அன்றைய தினம் அரங்கிற்கு கூடுதல் மெருகேற்றியது. கர்நாடக இசை ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமான 'வாதாபி கணபதிம்', 'சிங்கார வேலனே தேவா' போன்ற வேகமான பாடல்களை அவற்றின் ரசம் குறையாமல் அனாயாசமாக வாசித்து அவையோரின் மிகுந்த கை தட்டல்களை பெற்றனர். இறுதியாக வந்த 'குறை ஒன்றும் இல்லை கண்ணா' நெஞ்சை உருக்கியது. நம் நாட்டு கலைகளை மறக்காமல் வெளிநாடு சென்றாலும் தம் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கும் பெற்றோர்களுக்கு
தனி பாராட்டுக்கள். அன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் உறுப்பினர்கள் லதாவும் காயத்ரியும் ரசிக்கத்தக்க வகையில் நகைச்சுவை கலந்து தொகுத்து வழங்கினர். கலைநிகழ்ச்சிகளை தொடர்ந்து சங்கரா குழுவினர் கண்களின் முக்கியத்துவம் பற்றிய ஒரு இருபது நிமிட நிகழ்ச்சியை திரையில் தொகுத்து வழங்கினர்.
இரவு விருந்துடன் அன்றைய இரவு இனிதே நிறைவடைந்தது.