கிரேக்க நாட்டிலுள்ள டெல்பி ஆரக்கிளுக்கும் (ஒரு பெண் சாமி ஆடி குறி சொல்லுதல்) தமிழ் நாட்டிலுள்ள சாமி ஆடிகள், கோடங்கி அடிப்போர், குறி சொல்லுவோருக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது (இதைப் பற்றி தனி கட்டுரையில் தந்திருக்கிறேன்). இது போலவே கிரேக்க ஸ்பிங்ஸ் (SPHINX) பூதத்துக்கும் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் பல வகை பூதங்களுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. ஏற்கனவே அப்பர், சுந்தரர் ஆகியோருக்கு உதவிய பூதங்கள் பற்றி தனி கட்டுரையில் கூறிவிட்டேன். எகிப்திலும் ஸ்பிங்ஸ் சிலகள் உண்டு. ஆனால் கிரீஸ் நாட்டின் தீப்ஸ் நகரில் உள்ளது பற்றித்தான் இந்தக் கதை.
இதோ சிலப்பதிகார பூதக் கதைகள்:
இந்திரன் தலை நகரான அமராவதியை முசுகுந்தன் என்ற சோழ மன்னன் காத்தான் என்றும் அதற்கு நன்றி தெரிவிக்கும் முகத்தான் காவல் பூதத்தையும் ஐந்து வகை மன்றங்களையும் அனுப்பிவைத்தான் என்றும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் எழுதியுள்ளார் (5: 65-67, 6:7-17). (முசுகுந்தன் என்ற மன்னன் பெயரை உரைகாரர்கள் தந்தனர்).
காவல் பூதம் அமராவதியில் அசுரர் விடுத்த இருள் அம்பினைப் போக்கியது. இந்திரன் அனுப்பியதால் பூம்புகாருக்கு வந்து நாளங்காடியில் தங்கி பலிகளை ஏற்றுவருகிறது என்று சிலம்பு கூறும் (7: 14)
ஐவகை மன்றம் பற்றி சிலப்பதிகாரம் மிகவும் விரிவான தகவல்களைத் தருகிறது (5: 111- 140). 1.) சுருக்கமாகச் சொன்னால், களவாட நினைப்போரை நடுங்க வைக்கும் வெளியிட மன்றம் 2.) நோயால் அழுகியவரைக் குணப்படுத்தும் மன்றம். அதாவது ஒரு பொய்கையில் குளித்தவுடன் நோய்கள் ஓடிவிடும். நம் ஊர் புஷ்கணிகள் போல 3.) நஞ்சாலும் பேயாலும் துன்புற்றாரின் துயர் நீக்க ஒளியை வீசும் மன்றம். அதாவது நவீன லேஸர் ஒளிக் கற்றை சிகிச்சை போல.4.) ஒழுக்கம் கெட்டவரை நிலத்தில் புடைத்துச் சாப்பிட்டு விடும் சதுக்க பூதம் ( இது உண்மையில் இருந்தால் ஜனத்தொகைப் பெருக்கப் பிரச்சினை பற்றி நாம் கவலையே பட வேண்டாம். அதுவே மக்கட் தொகையைக் குறைத்துவிடும்!! 5.) அரசன் செங்கோல் தவறி ஆட்சி புரியினும் சபையோர் நேர்மை குன்றினாலும் கண்ணீர் விட்டு அழும் பாவை மன்றம் ( இது இன்று இருந்தால் நித்திய அழுகைதான்!!)
இது தவிர அழற்படுகாதையில் ஆதி பூதம், அரச பூதம், வணிக பூதம், வேளாண் பூதம் ஆகிய நால் வருணப் பூதங்களும் மதுரை தீப்பற்றி எரிவதற்கு முன்னரே வெளியேறி விட்டதாகவும் இளங்கோ பாடுகிறார்.
அடைக்கலக் காதையில் பத்தினிப் பெண் ஒருத்தியைப் பற்றிப் பொய்யுரை உரைத்த ஒருவனை ஒரு பூதம் பாசக் கயிற்றால் பற்றிப் புடைத்து உண்டதாகவும் இருக்கிறது. பொய்க்கரி சொன்னவனுடைய தாயார் தனது மகனை விட்டுவிட்டு தன்னைப் பிடித்துக் கொள்ளலாம் என்று கெஞ்சிக் கேட்டபோதும் அதை பூதம் ஏற்கவில்லை. அந்த மனிதனை அவர்கள் கண் முன்னாலேயே அறைந்து கொன்று உண்டு விட்டது என்கிறார் இளங்கோ.
காடுகாண் காதையில் மதுரைக்கு வழி கேட்ட கோவலனுக்குப் பதில் கூறிய மறையவன், திருமாலிருஞ் சோலை பக்கத்தில் மூன்று பொய்கைகள் உள்ளதாகவும் அங்குள்ள தெய்வங்கள் என்ன என்ன கேள்விகள் கேட்கும் என்றும் என்ன பதில் கூறினால் நல்லது என்றும் சொல்லித் தருகிறான். இவை எல்லாம் கிரேக்க பூதக் கதையில் வரும் சில அம்சங்கள்.
புலவர் பெயர்களிலும் பூதம், பேய் உண்டு. சதுக்க பூதனார், பேய்மகள் இளவெயினி, காரைக்கால் பேயார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்—இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
கிரேக்க பூதம்
எகிப்திலும் கிரீஸிலும் ஸ்பிங்ஸ் உண்டு. ஸ்பிங்ஸ் சிலை பாதி சிங்கமாகவும், பாதி பெண் ஆகவும் இருக்கும். இரண்டு நாடுகளிலும் தீப்ஸ் என்ற நகரும் உண்டு. ஆனால் பூதக் கதை கிரேக்க வீரன் ஈடிபஸ் பற்றியது. அவன் பாதி சிங்க உடலும் பாதி பெண் உருவமும் கொண்ட ஸ்பிங்ஸைப் பார்க்கிறான். அது கேள்விகள் கேட்கும். பதில் சொல்லாதவர்களைப் பிடித்துச் சாப்பிட்டு விடும். தீப்ஸ் நகர மக்களுக்கு இது ஓயாத கவலை தந்தது. வழிப்போக்கர்களைக் கேள்வி கேட்டு அச்சுறுத்தி வந்தது. இதைப் படிக்கும் போது மஹாபாரதத்திலுள்ள யக்ஷப் ப்ரஸ்னம் கதையும் ,விக்ரமாதித்தன் வேதாளம் கதைகளும் ஞாபகத்துக்கு வரும்.
ஈடிபஸ் போனபோது அவனிடம் கேட்ட கேள்விகள்: எது சில நேரம் இரண்டு காலகளோடும் சில சமயம் மூன்று கால்களோடும் சில சமயம் நான்கு கால்களோடும் நடக்கும். எது அப்படி 4 கால்களோடு நடக்கையில் பலவீனமாக இருக்கும்?
ஈடிபஸ் கொடுத்த விடை: மனிதன். குழந்தையாக இருக்கும் போது எழுந்து நிற்க முடியால் நாலு “கால்”களில் தவழ்ந்து செல்லுவான். பின்னர் இரண்டுடன் நடந்து கைத்தடியுடன் நடக்கையில் மூன்று கால்களோடு இருப்பான்.
ஒருவரை ஒருவர் பாதிக்கும் சகோதரிகள் யார்? பகலும் இரவும் என்று ஈடிபஸ் பதில் கொடுத்தான். இறுதியில் ஸ்பிங்ஸ் ஒரு மலையிலிருந்து விழுந்து இறந்தது.
ஆக கேள்விகள் கேட்டு அச்சுறுத்துவது, தவறிழைப்போரைச் சாப்பிடுவது ஆகிய அம்சங்களில் சிலப்பதிகார தமிழ் பூதத்துடன் ஒற்றுமையைக் காணலாம்.